×

முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் பகுதியில் டெங்கு பரப்பும் கொசுக்கள்: 2 பள்ளிகளுக்கு தலா ரூ.10,000 அபராதம்

முத்துப்பேட்டை, அக்.25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் பருவமழை துவங்கியதையடுத்து டெங்கு மற்றும் காய்ச்சல் ஏற்படாமல் தடுக்க வட்டார சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மருத்துவக்குழுவினர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும், அதேபோல் அனைத்து அங்கன்வாடி பள்ளிகளுக்கும் சென்று அதிரடி ஆய்வு மற்றும் மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று அதிரடி ஆய்வு மற்றும் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். முன்னதாக 2வது வார்டு குடியிருப்பு பகுதிக்கு சென்ற மாவட்ட பூச்சியியல் வல்லுநர் பழனிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) அன்பரசன், வட்டார மருத்துவ அலுவலர் கிள்ளிவளவன், முத்துப்பேட்டை பேரூராட்சி செயல்அலுவலர் செந்திலன் ஆகியோர் அங்கு ஆய்வு செய்து டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொள்ள மஸ்தூர் பணியாளர்களுக்கு உத்தரவிட்டு சுத்தம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மத்தியில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு சென்ற இந்த குழுவினர் அங்கு பள்ளி வளாகம் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளதா? டெங்கு கொசுவை உற்பத்தி செய்யும் புழுக்கள் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். மேலும் மாணவர்கள் மத்தியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதில் ரயில்வே கேட் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது டெங்கு கொசு உற்பத்தி செய்யும் வகையில் விளையாட்டு உபகரணங்களில் டெங்குவை பரப்பும் புழுக்கள் இருந்ததால் அந்த பள்ளிக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அப்பொழுது சுகாதார மேற்பார்வையாளர் பழனியப்பன், சுகாதார ஆய்வாளர் நாகராஜ் மற்றும் சுகாதாரத்துறையினர் பேரூராட்சி பணியாளர்கள் மஸ்தூர் பணியாளர்கள் உடன் இருந்தனர். வலங்கைமான்: வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் சுகாதாரத்துறையினர் மற்றும் ஊரகவளர்ச்சித்துறையினர் டெங்கு கொசுக்கள் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர்.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் கிராமத்தில் அரித்துவாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் கோபு தலைமையில் ஊராட்சி செயலளர் திவ்யா முன்னிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் டெங்கு கொசுக்கள் ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். வீடு வீடாக சென்று டெங்கு கொசு உற்பத்தி ஆகும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ள டயர், தேங்காய் சிரட்டை, பிளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவற்றை சேகரித்தனர்.

மன்னார்குடி: கூத்தாநல்லூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட உதவி இயக்குனர் சந்தானம் (ஊராட்சி), நகராட்சி  ஆணையர் குமரன் ஆகியோர் கூத்தாநல்லூரில் உள்ள கொரடாச்சேரி மெயின் ரோடு, திருவாரூர் மெயின் ரோடு, தோட்டச்சேரி மற்றும் கம்பர் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று தீடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் இயங்கி வரும் ஒரு தனியார் பள்ளியில் ஒரு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேல்தளத்தில் டெங்கு நோயை பரப்பும் ஏடிஎஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பள்ளிக்கு  ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Dengue mosquitoes ,area ,Koothanallur ,schools ,
× RELATED வாட்டி வதைக்கும்...