×

முத்துப்பேட்டை பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் பரிதவிப்பு

முத்துப்பேட்டை, அக்.25: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதி விவசாயம் நிறைந்த ஒரு பகுதியாகும். இதில் ஆண்டுதோறும் ஒன்றியம் முழுவதும் சுமார் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தாண்டு இப்பகுதியை தாக்கிய கஜா புயலின் கோரதாண்டவதால் சாகுபடியை மட்டுமின்றி அனைத்து வாழ்வாதாரங்களையும் புரட்டிப் போட்டது. இருந்தும் இப்பகுதி விவசாயிகள் மனம் தளராமல் தற்பொழுது வந்த காவிரிநீரையும் மழைநீரையும் பயன்படுத்தி இந்தாண்டு சம்பா சாகுபடி பணியை முழு ஆர்வத்துடன் துவங்கினர். அதன்படி முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சம்பா சாகுபடி பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதில் தம்பிக்கோட்டை துவங்கி கோவிலூர் ஆலங்காடு, உப்பூர் கோபாலசமுத்திரம், ஜாம்புவானோடை, தில்லைவிளாகம், இடும்பாவனம், கற்பகநாதற்குளம், தொண்டியக்காடு, எடையூர் என கள்ளிக்குடி வரையிலான விவசாய நிலங்கள் அனைத்ததியிலும் டிராக்டர் உதவியுடன் சேறடித்து வயலை சமன்படுத்தி அதில் நாற்று நடும்  பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விதைவிட்ட வயல்களில் நாற்று பறிப்பும் ஜரூராக மேற்கொள்ளபட்டு நடவுவயலுக்கு நாற்று கட்டுகள் இடம் மாற்றப்பட்டு வருகின்றன.

முத்துப்பேட்டை ஒன்றியத்தை பொறுத்தவரையில் நடப்பாண்டில் 14 ஆயிரம் ஹெக்டரில் சம்பா சாகுபடி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப வேளாண் விற்பனை கிடங்குகளில் விதைநெல் இருப்பு பெற்று விவசாயிகள் தேவைக்கு விநியோகிக்கப்பட்டது. பற்றாக்குறைக்கு வெளி மாவட்டங்களிலிருந்தும் வேளாண்துறையினரால் விதை நெல் வாங்கி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் கோ50 போன்ற குறிப்பிட்ட நெல் ரகங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் குறுகிய கால மாற்று ரக நெல் விதைகளை விவசாயிகள் தேடி சேகரித்து விதைத்துள்ளனர். இதில் மழையால் பாதிக்கப்பட்ட வயில்களில் மறுவிதை தெளிப்பும் செய்யப்பட்டுள்ளது. நேரடி விதைப்பு செய்த வயல்களில் பயிர் வளர்ந்துள்ள நிலையில் நிலத்தில் இடைவெளி கண்ட பகுதிகளில் கலப்பு நடவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக நாற்று விட்டு பறித்த இளம்பயிர்கள் தற்போது சேற்று வயலில் நடப்பட்டு வருகின்றன. பயிர்களுக்கு போதிய நீர்வைத்து கட்டப்பட்ட நிலையில் காற்றிலாடும் பயிர் பசுமையுறவும், தண்டு வளர்ச்சிக்கும் அவசியம் இடு உரமிட வேண்டும். அதற்கான யூரியா உரத்திற்கு முத்துப்பேட்டை ஒன்றியம் முழுமைக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இடும்பாவனம், கற்பகநாதர்குளம் பகுதியில் அதிகளவில் தட்டுப்பாடு உள்ளது. அடியுரம் தாமதமானாலும் மேல் உரமான யூரியா கொடுத்தால் தான் பயிர் உயர வளர்ந்து பச்சை காணும். உரமிடலையும் நடவுநட்ட நான்கைந்து நாட்களில் மேற்கொள்வது நலம் என தெரிவிக்கும் விவசாயிகள் யூரியா கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். யூரியா தட்டுப்பாடு ஏற்ப்படுள்ளதால் தனியார் சிலர் அதிகளவில் கொள்ளை லாபம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.

இதுகுறித்து கற்பகநாதர்குளம் விவசாயி ராமலிங்கம் கூறுகையில், முத்துப்பேட்டை ஒன்றியப் பகுதி குறிப்பாக இடும்பாவனம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரத்தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி மூலம் யூரியா வழங்கப்படவில்லை. தனியார் உரக்கடைகளில் யூரியா மூட்டை ரூ.350 வரை விற்கப்படுகிறது. அதோடு வாளி உரம், டிஏபி வாங்கினால்தான் யூரியா கொடுக்கின்றனர். விவசாயக் கடனுக்கும், நகைக்கடனுக்கும் யூரியா வழங்கப்படவில்லை. மேலும் பல விவசாயிகளுக்கும் நகை கடன் வழங்கப்படவில்லை. வேளாண் அலுவலர்கள் எவரும் இப்பகுதிக்கு வருவதில்லை. வளரும் பயிருக்கு யூரியா தேவை அவசியமாகும், அடியுரம் தாமதமானாலும் யூரியா கொடுத்தால் தான் பயிர் உயர வளரும். உரம் காணாது வளர்ச்சி குன்றிய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகிவிடும், அதனால் நடவு வயல், தெளி வயல் அனைத்திலுமே யூரியா இட வேண்டும். இதனால் இந்தாண்டு இப்பகுதி விவசாயிகளின் சாகுபடி கேள்விகுறியாக உள்ளது. உடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...