×

பெருந்துறை அரசு மருத்துவமனையான ஐஆர்டி.,யில் மருந்து கிடைக்காமல் தவிக்கும் நோயாளிகள்

பெருந்துறை, அக்.25: பெருந்துறையில் அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்ட ஐஆர்டி மருத்துவமனையில் மருந்து, மாத்திரை கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஐஆர்டி மருத்துவமனையை, கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மருத்துவமனையாக பொது சுகாதார துறையின்கீழ் செயல்படும் என அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் ஐஆர்டி மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றவும் அறிவிப்பு வெளியானது. ஆனால், இது ஐஆர்டி மருத்துவமனை அரசு மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டதால் இங்கு மருந்து, மாத்திரை இலவசம். இதனால், நோயாளிகள் அதிகளவில் வருகின்றனர். ஐஆர்டி மருத்துவமனை, அரசு மருத்துவமனையாக அறிவிப்பதற்கு முன்பு இங்கு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு இலவசமாகவும், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்திலும் சேவை அளிக்கப்பட்டது.ஆனால் ஐஆர்டி, அரசு மருத்துவமனையான பிறகும் முழு உடல் பரிசோதனைக்கு 1000 ரூபாயும், எக்ஸ்ரே எடுக்க 50 ரூபாயும் வசூலிப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், வெளி நோயாளிகளை பரிசோதிக்கும் மருத்துவர், 10 நாட்களுக்கு மாத்திரை எழுதிக்கொடுத்தாலும் மருந்தகத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுமே மாத்திரை வழங்கப்படுகிறது.

மீதமுள்ள நாட்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் வாங்க நோயாளிகள் நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். காலை 7 மணி முதல் மதியம் 2 வரை மருத்துவர்கள் பணியில் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்தாலும் குறித்த நேரத்திற்கு பெரும்பாலான மருத்துவர்கள் வருவதில்லை.நோயாளிகள் சிகிச்சை பெற காலை 6 மணிக்கே வந்து காத்திருந்தாலும் 9 மணிக்கு பிறகே மருத்துவமனை முழுமையான செயல்பாட்டுக்கு வருகிறது. அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், மருத்துவக் கல்லூரி முதல்வருமான ராஜேந்திரன் மருத்துவமனைக்கே வருவதில்லை. மருத்துவக் கல்லூரிக்கு மட்டும் வந்து செல்வதால் இங்குள்ள பணியாளர்கள் முறையாக பணியாற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், தற்போது வரை ஐஆர்டி மருத்துவமனை என அனைத்து பக்கங்களிலும் பலகை வைத்திருப்பதால் இது அரசு மருத்துவமனை தானா என நோயாளிகள் குழப்படைந்துள்ளனர்.

Tags : IRT ,Perundurai Government Hospital ,
× RELATED சித்த மருத்துவம் சொல்வது என்ன?