×
Saravana Stores

கரை சீரமைக்கப்பட்டதால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் அடுத்த  நசியனூர் மலைப்பாளையம் கீழ்பவானி வாய்க்காலில் கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி உடைப்பு ஏற்பட்டு வாய்க்கால் நீர் கிராமத்துக்குள் புகுந்ததால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர்  உடனடியாக நிறுத்தப்பட்டது.   தற்போது வாய்க்கால் சீரமைப்பு பணி நிறைவு பெற்றதால் நேற்று காலை முதல் மீண்டும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு ஆண்டுதோறும் பாசனத்துக்கு  தண்ணீர் திறந்துவிடப்படும். இதன் மூலம்  ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்கு கீழ்பவானி வாய்க்காலில் 1000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டது.  124 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஆகஸ்ட் 20ம் தேதி 55 வது மைலில் உள்ள  நசியனூர் அருகே மலைப்பாளையம்  வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வாய்க்காலில் சென்ற  1000 கன அடி நீர் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. கடந்த 22 நாட்களாக கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைத்து கரையை பலப்படுத்தும் பணி இரவு பகலாக நடைபெற்றது.  கரை பலப்படுத்தும்  பணி தற்போது நிறைபெற்றுள்ளதால் 22 நாட்களுக்கு பிறகு சோதனை ஓட்டமாக நேற்று காலை பவானிசாகர் அணையில் இருந்து 200 கன அடி நீர் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது. இந்த நீரானது 5 நாட்கள் பயணித்து  மலைப்பாளையம் வாய்க்காலை சென்றடையும். வாய்க்கால் கரையில் கசிவு ஏற்படாமல் உறுதித்தன்மையுடன் இருப்பதை பொதுப்பணித்துறையினர் உறுதி செய்தபிறகு  வாய்க்காலில் திறந்துவிடப்பட்ட 200 கன அடி தண்ணீர் படிப்படியாக உயர்ந்து 2300 கன அடியாக அதிகரிக்கப்படும். கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படுவதால் நெல் நாற்றங்கால் தயார்படுத்தும் பணி துவங்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்….

The post கரை சீரமைக்கப்பட்டதால் கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kilpawani canal ,Sathyamangalam ,Erode district ,Nasianur Malaipalayam ,Kiliphavani canal ,
× RELATED தாளவாடி மலைப்பகுதி சாலையில் பகலில் நடமாடிய காட்டு யானை