×

சிறுவாபுரி முருகன் கோயில் அருகே குப்பை குவியலால் கடும் துர்நாற்றம்

ஊத்துக்கோட்டை, அக். 25: பெரியபாளையம் அருகே சின்னம்பேடு ஊராட்சியில் சிறுவாபுரி முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு  நூற்றுக்கணக்கான பக்தர்களும், செவ்வாய் கிழமை, கிருத்திகை ஆகிய நாட்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம்  பக்தர்கள்  வரை வந்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள்  திருமண தடை, வீடு கட்டுதல், புத்திர பாக்கியம் போன்ற பல்வேறு வேண்டுதலுக்காகவும், ஆடி கிருத்திகையில் பால் குடம் எடுப்பது, காவடி எடுப்பது, மற்ற நாட்களில்   இக்கோயிலுக்கு வந்து விளக்கு ஏற்றியும்,  பிரசாதம் வழங்கியும், அர்ச்சனை செய்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் உணவு பண்டங்களை உண்டு விட்டு இலை, பேப்பர் தட்டு உள்ளிட்ட குப்பைகளை  கோயிலுக்கு செல்லும் சாலை, குளக்கரை,  அன்னதான கூடம் ஆகியவற்றின் அருகில்  போட்டு செல்கின்றனர். மேலும்,  இங்கு உள்ள வியாபாரிகள் தங்களது கடைகளில் சேரும் குப்பைகளை கோயில் அருகே சாலை ஓரத்தில் கொட்டுகிறார்கள்.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சாலை ஓரம் மற்றும் குளக்கரை அருகிலும்  உள்ள குப்பைகளால் கடும் துர்நாற்றம் வீசி,  முகம் சுழித்தபடி செல்கிறார்கள்.  எனவே சாலை, குளக்கரை, அன்னதான கூடம்  ஓரத்தில் உள்ள குப்பைகளை  அகற்றிட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து  பக்தர்கள் கூறுகையில், ‘‘கோயிலுக்கு வெளியே சாலை ஓரத்திலும், குளத்தின் பகுதியிலும், அன்னதான கூடத்தின் அருகிலும்  குப்பைகளை கொட்டுவதால்  துர்நாற்றம் வீசுகிறது. இதனால், பக்தர்கள் நிம்மதியாக கோயிலுக்கு வர முடியவில்லை. எனவே, சாலை ஓரத்தில் உள்ள குப்பை கூலங்களையும், குளம், அன்னதான கூடத்தின் பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும் உடனே  அகற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : Murugan Temple ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...