×

தாமரைக்குப்பம்-தொம்பரம்பேடு இடையே புதர்மண்டி கிடக்கும் கிராம சாலை

ஊத்துக்கோட்டை, அக். 25:  தாமரைக்குப்பம்-தொம்பரம்பேடு  இடையே குண்டும் குழியுமாகியும், புதர்மண்டியும் உள்ள கிராம சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியத்தில் தாமரைக்குப்பம் கிராமம் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், மாணவர்கள்,  விவசாயிகள், உள்பட 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இவர்கள் வேலை மற்றும் பள்ளிக்கூடத்திற்கு  செல்ல வேண்டுமானால் தாமரைக்குப்பத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் நடந்து தொம்பரம்பேடு பஸ் நிறுத்தத்திற்கு சென்று அங்கிருந்து ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பெரியபாளையம், சென்னை  ஆகிய பகுதிகளுக்கு பஸ் மூலம் செல்வார்கள்.

மேலும் மாணவர்கள் தாமரைக்குப்பத்தில் இருந்து  நடந்தும், சைக்கிள்களில் வரும்போதும், ஊழியர்கள் பைக்கில் வேலைக்கு செல்லும்போதும் தாமரைக்குப்பம்-தொம்பரம்பேடு கிராம சாலையை பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு செல்லும்போது சாலை சேறும் சகதியுமாகவும்,  குண்டும் குழியுமாகவும் உள்ளதோடு இருபுறமும் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் சாலை  பள்ளத்தில் விழுந்து வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாவதோடு  இவ்வழியாக தனியாக  வருவதற்கும் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கிராம  சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தாமரைக்குப்பம் பகுதியில் இருந்து  தொம்பரம்பேடு பஸ் நிறுத்தம் வரை நடந்தும், சைக்கிள் மற்றும் பைக்கிள் சென்று பஸ் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோம்.  அவ்வாறு செல்லும் போது  கிராம சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் வீடு திரும்பும்போது சாலை பள்ளத்தில் விழுந்து காயம் அடைகிறோம்.   மேலும் தொம்பரம்பேடு சுடுகாட்டு பகுதியில்  சாலை ஓரங்களில் குப்பைகள் கிடக்கிறது. அந்த  குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைத்து குப்பைகளை அகற்ற வேண்டும்’’ என்றனர்.

Tags : village road ,Tamaraikkuppam - Thombarampadu ,
× RELATED 140 ஊழியர்களை நிரந்தரம் செய்யக்கோரி 4...