×

விவசாய தொழிலாளர்கள் சங்கம் போராட்டம்

செங்கல்பட்டு, அக், 25: குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.செங்கல்பட்டு, தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் குடிமனை பட்டா இல்லாமல் வசிக்கின்றனர். இதனால் மின்சாரம், தொகுப்பு வீடுகள் உள்பட பல்வேறு அரசு நலத்திட்டங்களை பெறமுடியாமல் அவதிப்படுகின்றனர்.இந்த வேளையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 318ஐ பயன்படுத்தி குடிமனை பட்டா இல்லாதவர்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள், நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள், கல்வி  உதவித் தொகை, திருமண உதவித் தொகை, விபத்து நிவாரண உதவி,  ஓய்வூதியம்  உள்ளிட்ட நலத்திட்டங்களைப் பெற உழவர் பாதுகாப்பு திட்டத்தில் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

100 வேலை திட்டத்தில்  தேவைப்படும் நிதியை  ஒதுக்கி,  ஆண்டுக்கு 200 நாளாக  வேலை கொடுத்து, ₹400 தினக்கூலி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டக்குழு உறுப்பினர் என்.அருணாச்சலம் தலைமையில் போராட்ட நடந்தது.மாவட்ட செயலாளர் பி.சண்முகம், மாவட்ட தலைவர் டி.கோவிந்தன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜி.மோகனன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட தலைவர் எம்.அழகேசன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர்  வெ.அரிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். இறுதியில் விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில துணைத் தலைவர் எம்.சின்னதுரை, செங்கல்பட்டு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுக்களை  வழங்கினார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு