×

வாலாஜாபாத் பேரூராட்சியில் தண்ணீரில் தத்தளிக்கும் சார்பதிவாளர் அலுவலகம்

வாலாஜாபாத், அக். 25: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள சார் பாதிவாளர் அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு வரும் அலுவலர்களும், பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.வாலாஜாபாத் பேரூராட்சி, 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம், அரசு மாணவிகள் விடுதி, கருவூலக அலுவலகம்  ஆகிய கட்டிடங்கள் ஒரே  வளாகத்தில் அமைந்துள்ளன. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கானோர், பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மேற்கண்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இங்கு பணிக்கு வரும்  அலுவலர்களும், பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களும் கடும் சிரமம் அடைகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தினமும் பத்திரப் பதிவு  உள்பட பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

இங்கு முறையான கால்வாய் வசதி இல்லாமல் உள்ளதால், தற்போது பெய்து வரும் மழையால்,  இந்த வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி குளம்போல் நிற்கிறது. அலுவலகத்துக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், அரசு மாணவிகள் விடுதியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படிக்கின்றனர். இந்த வளாகத்தில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதில், தண்ணீர் தேங்கி டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு  உற்பத்தியாகும் நிலை காணப்படுகிறது. மேலும், தேங்கிய தண்ணீர் கழிவுநீராகவும் மாறி கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.இதுபற்றி மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்கில் உள்ளனர்.எனவே, மாவட்ட நிர்வாம், மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து, சுகாதார சீர்கேட்டை  தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Relatives ,Walajabad Beirut ,
× RELATED குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது...