×

நிதி பற்றாக்குறையால் திவாலாகும் நிலையில் சர்க்கரை ஆலை

அலங்காநல்லூர், அக்.25: தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை செய்த விவசாயிகளுக்கு கடந்த 2016 ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை ரூ.9 கோடி வரை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பணம் பாக்கி உள்ளது. இந்த பணத்தை வழங்க வேண்டி ஆலையின் முன்பு கரும்பு விவசாயிகள் பல முறை ஆர்ப்பாட்டம் நடத்தினர். தீபாவளி பண்டிகை கால செலவிற்காக பணம் வழங்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் தற்போது 6 கோடியே 60 லட்சம் நிலுவைத் தொகை விவசாயிகளுக்கு வழங்க ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று ஆலை அலுவலகத்தில் தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் மேலாண்மை இயக்குநர் சிவகாமி அலுவலக மேலாளர் பாலன் துணைத் தலைவர் கதிரேசன் உறுப்பினர்கள் பழனிச்சாமி ,நல்லமணிகாந்தி, அப்பாஸ், திருமாறன், ராமச்சந்திரன் உள்ளிட்ட ஆலை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மேலூர். கன்னிவாடி, அருப்புகோட்டை, திருமங்கலம் உள்ளிட்ட அரவை கோட்ட பகுதிகளில் இருந்து ஆலையின் அரவைக்கு தேவையான கரும்பு பதிவு குறைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மழையில்லாத காரணத்தினால் கரும்பு விவசாயத்தை விவசாயிகள் கைவிடும் நிலை ஏற்பட்டதாக விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும் வறட்சியிலும் கரும்பு விவசாயத்தை கைவிடாமல் தொடர்ந்து அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை அரவைக்கு கரும்பு அனுப்பி வரும் விவசாயிகளை பழிவாங்குவது போல் தற்போதைய ஆளும் கட்சி செயல்பட்டு வருகிறது. மேலும் கரும்பு விவசாயத்தை மேம்படுத்தும் விதமாக வேளாண்மை துறை மூலம் தனி நிதி ஒதுக்குவது இல்லை. கரும்பு விவசாயத்தை அடியோடு அழிக்கும் விதமாக தற்போதைய அதிமுக அரசு செயல்படுகிறது. மேலும் கூட்டுது றை மூலம் லாபகரமாக இயங்கி வந்த இந்த சர்க்கரை தனியாருக்கு தாரை வார்க்கும் நோக்கத்தில் ஆலையில் வேலை பார்க்கும் 300 தொழிலாளர்களுக்கு கடந்த 10 மாதமாக சம்பளம் வழங்க வில்லை. ஆலை நிர்வாகத்திறகு மத்திய,மாநில அரசுகள் வழங்க வேண்டிய நிலுவை தொகை 100 கோடிக்கு மேல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றசாட்டு தெரிவித்து பேசினர்.

மேலும் நடப்பு அரவை பருவத்திற்கு தேவையான கரும்பு பதிவு ஆயிரம் டன்னுக்கும் குறைவாக உள்ளதால் இந்தாண்டு கரும்பு அரவை தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வேலை இழப்பு ஏற்படாத வகையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் அரவை தொடங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் வற்புறுத்தியுள்ளனர். ஏற்கனவே இந்த ஆலை நிதிபற்றாக்குறை மற்றும் கரும்பு பதிவு இல்லாத காரணத்தினால் கடந்த 2003 முதல் 2007 வரை 27 மாதம் அப்போதை அதிமுக ஆட்சியில் மூடப்பட்டது.அதன்பின்பு திமுக ஆட்சி வந்ததும் ஆலை நிர்வாகத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கரும்பு அரவை தொடங்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் தற்போதைய அதிமுக ஆட்சியில் மீண்டும் அலங்காநல்லூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு தேவையான நிதியை இந்த அரசு ஒதுக்காத காரணத்தினால் ஆலை திவாலாகி மூடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களும் பாதிக்கப்படும் அபாயத்திலிருந்து காப்பாற்ற இந்த அரசு முன் வர வேண்டும் என கரும்பு விவசயிகள், தொழிற்சங்க நிர்வாகிகள். ஆலை தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துளனர். மேலும் மூடும் அபாயத்தில் உள்ள அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை தொடர்ந்து இயங்க அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இணைந்து அரசை வழியுறுத்தி போராட முன் வர வேண்டும் என்றும் கேட்டுகொண்டுள்ளனர்.

Tags : Sugar plant ,
× RELATED படாளம் சர்க்கரை ஆலையில் 6385 டன் உற்பத்தி: அதிகாரிகள் தகவல்