×

அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதித்தோரை பார்வையிட்ட திமுக நிர்வாகிகள்

மதுரை, அக். 25: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரையில் அரசு மருத்துவமனைக்கு மர்ம காய்ச்சலுக்காக தினமும் ஏராளமானோர் சிகிச்சை பெற வந்த வண்ணம் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 95 பேர் சிகிச்சைக்கு வந்தனர். டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 3 பெண்கள் உள்பட 16 பேர் இந்த மருத்துவமனையில் தனிப்பிரிவு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை நேற்று மதுரை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் தளபதி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, திமுக மருத்துவரணி மாநில துணைத்தலைவர் டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ. பகுதி செயலாளர்கள் அக்ரிகணேசன், கிருஷ்ணபாண்டி ஆகியோர் பார்வையிட்டனர். டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படுவது குறித்து மருத்துவமனை டீன் வனிதா விளக்கி கூறினார்.

இதன் பிறகு கோ.தளபதி, டாக்டர் சரவணன் ஆகியோர் நிருபர்களிடம் கூறும்போது, “திமுக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி டெங்கு பாதித்து மதுரை அரசு மருத்துவமனையில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 3 பெண்கள் உள்பட 16 பேரை பார்த்து ஆறுதல் கூறினோம். இங்கு டெங்கு காய்ச்சலினால் உயிர் இழப்பு ஏற்படவில்லை என்று டீன் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் மதுரை மாநகர் முழுவதும் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க அரசு மற்றும் மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Tags : executives ,DMK ,dengue fever victims ,government hospital ,
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்