×

6 மாதமாக நடந்த குழாய் பதிக்கும் பணி நிறைவு சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை

நாமக்கல், அக்.25: நாமக்கல் நகரில் 6 மாதமாக நடந்த குடிநீர் குழாய் பதிக்கும் பணி ஒருவழியாக நிறைவடைந்து விட்டது. ஆனால், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதால், தீபாவளி நேரத்தில் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.நாமக்கல் நகராட்சியில், புதிய குடிநீர் திட்டத்துக்காக குடிநீர் குழாய் பதிக்கும் பணி நாமக்கல் நகரில் சுமார் 6 மாதகாலமாக நடைபெற்றது. மோகனூர் ரோட்டில் உள்ள பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் முதல் பரமத்தி ரோட்டில் உள்ள பழைய நகராட்சி அலுவலகம் வரையிலான 700 மீட்டர் தூரத்துக்கு, சாலையில் குழி தோண்டி இரும்பு குழாய் பதிக்கும் நேற்று முன்தினத்துடன் ஒரு வழியாக முடிவடைந்தது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளின் மேற்பார்வையில், ஒப்பந்ததாரர்கள் இந்த பணியை மேற்கொண்டனர்.குறிப்பாக மோகனூர் ரோட்டில் உள்ள அண்ணாசிலையில் இருந்து, பழைய நகராட்சி அலுவலகம் வரையிலான சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி மட்டும் சுமார் 3 மாத காலம் நடந்துள்ளது. இதனால் பரமத்தி ரோடு இரண்டாக பிரிக்கப்பட்டு போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனால் 2 சாலைகளும் தற்போது முற்றிலுமாக சேதமடைந்து விட்டன. ஆங்காங்கே குண்டும், குழியுமாக சாலைகள் மாறிவிட்டது. தற்போது நாமக்கல் நகரில் தொடர்ந்து இரவில் மழை பெய்து வருவதால், குண்டும், குழியுமான சாலைகள் சேறும், சகதியுமாக மாறிவிட்டது.

தீபாவளி பண்டிகை நேரத்தில் மக்கள் அதிகமாக செல்லும் இந்த சாலை, மிகவும் மோசமாக இருப்பதால் வாகன ஒட்டுனர்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். நேற்று முன்தினம், பணியை முடித்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சாலையை சீரமைக்காமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்.  இதனால், 700 மீட்டர் தூரத்துக்கு சாலையை சீரமைக்கவேண்டிய பொறுப்பு, தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வந்துவிட்டது. இது குறித்து அத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், புதியதாக போடப்பட்டுள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் விட்டு சோதனை செய்து பார்த்த பிறகு தான், சாலையை புதியதாக போடமுடியும். அதிகமான குழிகள் தோண்டப்பட்டுள்ளதால், சாலையை முற்றிலுமாக போடவேண்டிய நிலை உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சோதனையை விரைவாக முடித்து கொடுத்தால், ஒரே நாளில் சாலையை புதியதாக போட்டு கொடுத்து விடுவோம்,’ என்றனர். தற்போது நவீன உபகரணங்கள் எவ்வளவோ வந்துவிட்ட போதிலும், அனுபவம் இல்லாத ஒப்பந்ததாரர்கள், சாலையை தோண்டி குடிநீர் குழாயை பதிக்கும் பணியில் ஈடுபட்டதால் சாலையும் சேதமடைந்ததுடன், அதிக காலம் பிடித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags :
× RELATED அனைத்து அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து