கிருஷ்ணகிரி, அக்.25: கிருஷ்ணகிரியில் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை வகித்து, பொதுமக்களிடம் தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, தீ விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அப்போது அவர் பேசுகையில், பட்டாசுகளை கையில் வைத்து கொண்டு வெடிக்க கூடாது. சிறுவர், சிறுமியர்களிடம் பட்டாசு மற்றும் மத்தாப்புக்களை வெடிக்கும்போது பெரியவர்கள் முன்னிலையில் வெடிக்கச் செய்ய வேண்டும். குழந்தைகளிடம் தீக்குச்சிகள், மத்தாப்பு பட்டாசு போன்ற எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை கொடுக்க கூடாது. வீட்டிற்குள் பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. மிகவும் தளர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு பட்டாசு, மத்தாப்பூ கொளுத்தக் கூடாது. பட்டாசுகளை கண்ணாடி பாட்டில்கள் மற்றும் தகர டப்பாக்களை கொண்டு மூடி வெடிக்கக் கூடாது. சமையலறையில் பட்டாசுக்களை வைத்தல் கூடாது.