×

பாசன கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தாமதம்

போச்சம்பள்ளி, அக்.25: போச்சம்பள்ளி அருகே பாசன கால்வாய் அமைக்க நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு இழப்பீடு தாமதத்தை கண்டித்து தமிழக முதல்வருக்கு மனு அனுப்பும் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அணையின் இடதுபுற கால்வாயின் கடைமடை ஏரியான பாளேகுளி ஏரியில் இருந்து,  கடந்த 2012ம் ஆண்டு புதிய கால்வாய் வெட்டப்பட்டது. சென்றாம்பட்டி ஏரி, அரசமரத்து ஏரி, செல்லம்பட்டி ஏரி, நாகரசம்பட்டி ஏரி வழியாக சந்தூர் ஏரி உள்ளிட்ட 28 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் இந்த கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டபோது, அங்கிருந்த பயனுள்ள மரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. இதற்கான இழப்பீடு தொகை கேட்டு விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த 7 ஆண்டுகளாக மனு அளித்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக செயல்பட்டு வருவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

 இந்நிலையில், கேஆர்பி அணை இடதுபுற நீட்டிப்பு பாளேகுளி-சந்தூர் ஏரி பாசன விவசாயிகள் சங்க தலைவர் சிவகுரு மற்றும் விவசாயிகள் இழப்பீடு கோரி தமிழக முதல்வருக்கு விரைவு தபால் மூலம் மனு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘28 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில், கடந்த 7 ஆண்டுக்கு முன்பு 148 விவசாயிகளின் நிலத்தை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் கையகப்படுத்தினர். அதற்குண்டான இழப்பீடு வழங்க கோரி, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் பலமுறை மனுக்கள் அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது 3 கட்டங்களாக விரைவு தபால் மூலம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கால்வாய் அமைக்க நிலம் கொடுத்தவர்கள் அனைவரும் சிறு விவசாயிகள் தான். எனவே, உரிய இழப்பீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : land ,irrigation canal ,
× RELATED தமிழ்நாட்டில் தயாராகிறது ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்..!!