×

தாட்கோ மூலம் தொழில் தொடங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, அக்.25:  தாட்கோ மூலம் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்கு செயல்படுத்தப்படும் பொருளாதார திட்டங்களில் பயன்பெற விரும்புபவர்கள்  என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யும் போது, விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்களுடன், புகைப்படம், சாதிச் சான்று, குடும்ப அட்டை அல்லது இருப்பிடச் சான்று, வருமானச் சான்று, பட்டா அல்லது சிட்டா, கல்வி தகுதி மற்றும் வயதிற்கான ஆதார சான்று, திட்ட அறிக்கை, வாகன கடனாக இருப்பின் ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ்(மேலொப்பம் பெற்றிருக்க வேண்டும்) ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரரின் தொலைபேசி எண், மின் அஞ்சல் முகவரி, திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.

நிலம் வாங்கும் திட்டத்திற்கு மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதி சான்று ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளம் மூலம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உதவி தேவைப்படுபவர்களின் வசதிக்காக, கிருஷ்ணகிரி தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில், ₹60 செலுத்தி விண்ணப்பிக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பம் பதிவு செய்த உடன் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள இந்து ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்தவர்கள், ஆன்லைனில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சூதாடிய 3 பேர் கைது