×

மகாராஜகடைக்கு இயக்கப்பட்ட இரவு நேர பஸ்சை நிறுத்தியதால் கிராம மக்கள் திண்டாட்டம்

கிருஷ்ணகிரி, அக்.25:  மகாராஜகடைக்கு இரவு நேரத்தில் வந்த பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி ஒன்றிய மதிமுக ஒன்றிய செயலாளர் டைகர் முருகன் தலைமையில், அப்பகுதி மக்கள் கிருஷ்ணகிரி கலெக்டர் பிரபாகரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரியில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் தனியார் பஸ்கள், மகாராஜகடை வழியாக செல்லாமல் அரசு கலைக்கல்லூரி வழியாக செல்கிறது. இதனால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கிராம மக்கள், பணியின் காரணமாக தினமும் கிருஷ்ணகிரி நகருக்கு வந்து செல்கின்றனர். மேலும் அவசர சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றனர். மகாராஜகடை வழியாக இந்த பஸ்களை இயக்க வேண்டும் என பலமுறை கலெக்டர் அலுவலத்தில் கோரிக்கை மனு அளித்தும் இன்று வரை இந்த பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதி கிராமங்களில் இருந்து ஜவுளிக்கடை, நகைக்கடை, டான்சி வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, தினமும் செல்லும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், இரவு 8 மணிக்கு மேல் தங்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த 6 மாதங்களாக இவ்வழியில் சென்று வந்த அரசு டவுன் பஸ் தடம் எண்.29ம் நிறத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி மீண்டும் அரசு டவுன் பஸ்சை இயக்க வேண்டும். இல்லாவிட்டால் வரும் 28ம் தேதி நாரலப்பள்ளி கூட்ரோட்டில் பொதுமக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவோம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Residents ,village ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...