×

தேங்கி நிற்கும் நீரில் மீன்குஞ்சுகளை விட்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

காட்டுமன்னார்கோவில், அக். 25: சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி, சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மீன்குஞ்சுகளை விட்டு மா.கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது பெய்துவரும் மழையின் காரணமாக சிதம்பரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, லால்பேட்டை அருகே உள்ள கைகாட்டி பகுதி சாலையில் சுமார் 2 அடி பள்ளம் ஏற்பட்டுள்ளது. அதில் மழை நீர் தேங்கியுள்ளதால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 15க்கும் மேற்பட்டோர் இரண்டுசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து காயமடைந்தனர். மேலும் 2 பேர் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த பள்ளத்தை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நேற்று பள்ளத்தில் உள்ள குட்டையில் மீன் குஞ்சுகள் விடும் போராட்டத்தை நடத்தினர். வட்ட செயலாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி வட்ட நிர்வாகிகள் ஜெயக்குமார், கமலக்கண்ணன், காளிதாஸ், அப்துல் அஜீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை வருவாய் ஆய்வாளர், காவல்துறை உதவி ஆய்வாளர் காமராஜ் ஆகியோர் வந்து, சாலையை தற்காலிகமாக சரி செய்வதாக உறுதி அளித்தனர். மேலும் தேசிய நெடுஞ்சாலை பிரிவில், சாலை வருவதால் திட்ட இயக்குனர் சிவாஜி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சாலையை சரி செய்வதாகவும், மேலும் இந்த சாலையை போடுவதற்கு ரூ.20 லட்சம் மதிப்பீடு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, சாலையை உடனடியாக போட ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. தற்காலிக சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை என்றால், லால்பேட்டை பகுதி பொதுமக்களை ஒன்று திரட்டி நாளை(இன்று) போராட்டம் நடத்த இருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags : Civilians ,
× RELATED கடல் மீன் வரத்து குறைவால் அணை மீன் விலை அதிகரிப்பு