×

திண்டிவனத்தில் விபத்து நஷ்டஈடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி

திண்டிவனம், அக். 25: திண்டிவனத்தில் விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காத அரசு விரைவு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. திண்டிவனம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் தர் மனைவி விஜயலட்சுமி (55). இவர் கடந்த 2014ம் ஆண்டு வீட்டின் அருகே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு விரைவு பேருந்து விஜயலட்சுமி மீது மோதியது. இந்த விபத்தில் விஜயலட்சுமி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து விஜயலட்சுமியின் மகள்கள் விபத்து நஷ்ட ஈடு கேட்டு, திண்டிவனம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்களுக்கு ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 850 நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டு செப்.20ம் தேதி தீர்ப்பு கூறினார்.

ஆனால் இதுநாள் வரை மனுதாரருக்கு, போக்குவரத்து கழகத்தின் சார்பில் நஷ்ட ஈடு வழங்கவில்லை. ஆகையால் மனுதாரர் தரப்பில் கோர்ட்டில் தீர்ப்பு நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  சுபத்ராதேவி,  அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாகம், மனுதாரர்களுக்கு ரூ.7 லட்சத்து 33 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இதற்காக அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்ய வேண்டும் என்று கடந்த ஆக.30ம் தேதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, நேற்று திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் உள்ள பேருந்து நிறுத்தத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.




Tags : State bus junction ,Tindivanam ,
× RELATED திண்டிவனம் அருகே தலையில் காயத்துடன்...