சீர்காழி, அக்.25:சீர்காழி அடுத்த ராதாநல்லூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள நூலக கட்டிடத்தில் வாசகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சீர்காழி அருகே ராதாநல்லூர் கிராமத்தில் கடந்த 1968ஆம் ஆண்டு முதல் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 21 ஆயிரம் நூல்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 2500 பேர் உறுப்பினராக உள்ளனர். நூலகத்திற்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்டவர்கள் வந்து படித்து பயன்பெற்று செல்கின்றனர். நூலக கட்டிடம் கடந்த 1980ம் ஆண்டு கட்டப்பட்டு உள்ளது. இந்த கட்டிடம் சரிவர பராமரிக்கப்படாமல் தற்போது இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது மேலும் கட்டிடங்களில் பல்வேறு இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் மழைநீர் உள்ளே செல்கிறது. இதனால் அடுக்கி வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் மழை நீரில் நனைந்து சேதம் அடைந்து வருகிறது கட்டிடத்தின் மேற்கூரையில் தார்பாய்கள் போட்டு வாசகர்கள் மூடி வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது வாசகர்களின் நலன் கருதியும் புத்தகங்களை பாதுகாக்கும் வகையில் கிளை நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.