சீர்காழி, அக்.25: சீர்காழி அருகே புதுத்துறை கிராமத்திலிருந்து திருநகரி கிராமம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து சாலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதன் காரணமாக சாலைகள் குறுகி காணப்படுகிறது. இந்த சாலைகளில் ஒரு வாகனம் வரும்போது மற்றொரு வாகனம் மாரி செல்ல முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. சில சமயங்களில் வாகனங்கள் மாறி செல்லும்போது விபத்துக்களும் நடந்து வருகிறது. சில இடங்களில் கருவேல மரங்கள் சாலையை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நான்கு சக்கர வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும்போது கருவேல மரங்களின் முள் குத்தி பாதிக்கப்படுகின்றனர் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சாலைகளில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் குகைக்குள் செல்வதுபோல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கருவேல மரங்கள் சாலைகளில் அடர்ந்து காணப்படுவதால் பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சுற்றுச்சூழலை பாதிக்கும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.பொதுமக்கள் வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையின் இருபுறங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.