×

பாதாள சாக்கடை பணி முடிந்தும் சீரமைக்காததால் சேறும் சகதியுமாக மாறிய சாலை: மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

அம்பத்தூர்: அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தால் சாலை சேதமடைந்தது கிடக்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 86வது வார்டில் ஐசிஎப் காலனி பிரதான சாலையை ஐசிஎப் காலனி, அயனம்பாக்கம், அத்திப்பட்டு, கொன்ராஜ்குப்பம், கோலடி, திருவேற்காடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும்  பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சாலையில் பல அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஐசிஎப் காலனி சாலை சேதமடைந்து தற்போது பெய்யும்  மழையால் சேறும் சகதியுமாக மாறிவிட்டதால் சாலையை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஐசிஎப் காலனி பிரதான சாலையில்  3 பள்ளிக்கூடம், 2 மருத்துவமனை, 1000 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், 100க்கு மேற்பட்ட வணிக வளாகங்கள் மற்றும் ஏராளமான  குடியிருப்புகள் உள்ளன.     கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் இந்த சாலை சேதமடைந்துள்ளது. தற்போது பெய்து வரும் பருவமழையால் சேதமடைந்த சாலையில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால்  இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் சில இடங்களில் புதைகுழி போல்  ஆகிவிட்டது. இதில் கார், சரக்கு வாகனங்கள் அடிக்கடி சிக்கிக்கொள்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மற்ற வாகனங்கள் செல்ல  முடியவில்லை. மேலும் இந்த சாலையில் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.     மேலும் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். மேலும் சேதமடைந்து கிடக்கும் சாலையால் வாடிக்கையாளர்கள் வணிக  நிறுவனங்களுக்கு அதிகமாக வராததால் வியாபாரம் நடைபெறாமல் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சேறும் சகதியுமான சாலையால் பாதசாரிகள் அறவே நடமாட முடியவில்லை. சில நேரங்களில் அவர்கள் சாலையில் உள்ள சேற்றில் விழுந்து செல்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல் அவசர தேவைக்கு நோயாளிகளை ஏற்றிச்செல்ல  ஆட்டோக்கள் கூட வர மறுக்கின்றன. இந்த சாலையை தற்காலிகமாக சீரமைக்க கோரி சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் அனுப்பியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் ஐசிஎப் காலனி பிரதான  சாலையில் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இனியாவது அம்பத்தூர் மண்டல நிர்வாகம் கவனித்து ஐசிஎப் காலனி பிரதான சாலையை தற்காலிகமாக சீரமைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : road ,Corporation ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...