×

வட்டார கல்வி அலுவலர்கள் சமரசம் இடமாற்றம் செய்யக்கோரி வகுப்புகளை மாணவர்கள் புறக்கணிப்பு ஒருதலைபட்சமாக செயல்படும் தலைமை ஆசிரியர்

திருவண்ணாமலை, அக்.25: திருவண்ணாமலை அருகே ஒருதலைபட்சமாக செயல்படும் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி வகுப்புகளை மாணவர்கள் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கக் பள்ளியில் 186 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியர் விஜயலட்சுமி உட்பட 5 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஒரு சில மாணவர்களிடம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், தகாத வார்த்தையால் பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று காலை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளிக்கு அருகே வகுப்புகளை புறக்கணித்து நிறுத்தி வைத்து, தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்த துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் குணசேகரன், மோகன் மற்றும் திருவண்ணாமலை டவுன் டிஎஸ்பி அண்ணாதுரை மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளி தலைமை ஆசிரியரை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வட்டார கல்வி அலுவலர்கள் இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். மேலும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பேரில், மாணவர்களை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Head teacher ,education officials ,
× RELATED நகராட்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை