×

கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் இட நெருக்கடியான கட்டிடத்தில் செயல்படும் அருங்காட்சியகம்

கரூர், அக். 25: கரூர் பழைய திண்டுக்கல் சாலையில் செயல்பட்டு வரும் அரசு அருங்காட்சியகம் சொந்த கட்டிடத்தில் மாற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகரின் மையப்பகுதியான பழைய திண்டுக்கல் சாலையில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட பழமை வாய்ந்த அனைத்து பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு தளங்களில் உள்ள அருங்காட்சியக வளாகத்துக்கு மாணவ, மாணவிகளும், அவ்வப்போது பொதுமக்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். மேலும் போதிய வருவாய் இல்லாத நிலையில்தான் அருங்காட்சியகத்தின் நிலை உள்ளது. புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்வதை விட ஒரு மாவட்டத்தின் பெருமையை நேரிடையாக பார்த்து தெரிந்து கொள்ளும் இடமாக அருங்காட்சியகங்கள் உள்ளன.

கடந்த பல ஆண்டுகளாகவே வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியத்தை சொந்த கட்டிடத்தில் மாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். சொந்த கட்டிடத்தில் இன்னும் கூடுதல் தகவல்களுடன் அருங்காட்சியகம் விரிவுப்படுத்தப்படும் பட்சத்தில் பார்வையாளர்கள் அதிகளவு வந்து செல்வார்கள். வருவாயும் பெருக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இடநெருக்கடியான இடத்தில் இது செயல்படுவதால் பார்வையாளர்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது என்ற நிலையை மாற்றும் வகையில், அருங்காட்சியகம் சொந்த கட்டிடத்தில் செயல்பட தேவையான ஏற்பாடுகளை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : museum ,building ,road ,Dindigul ,Karur ,
× RELATED அருங்காட்சியக வளாகத்தில் சித்த மருத்துவ முகாம்