×

மலேசியா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 91.5 லட்சம் தங்கம் பறிமுதல் : இளம்பெண் உள்பட 6 பேர் கைது

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர்.  அப்போது சென்னையை சேர்ந்த பரிஜானா (27) என்ற பெண், சுற்றுலா பயணியாக மலேசியா சென்று, இந்த விமானத்தில் திரும்பி வந்தார். அவரை நிறுத்தி சுங்க இலாக்கா அதிகாரிகள் விசாரித்தபோது, முன்னுக்குபின் முரணாக பேசியுள்ளார். இதனால், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனையிட்டனர். அப்போது அவரது உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதே நேரத்தில், துபாயில் இருந்து தனியார் விமானம் சென்னைக்கு வந்தது. அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த சதக்கத்துல்லா என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று, இந்த விமானத்தில்  திரும்பி வந்தார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு  சந்தேகம் ஏற்பட்டதால், அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். அப்போது, அவரது கைப்பைக்குள் ரகசிய அறை வைத்து, அதற்குள் 2 தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர், அவரை தனி அறைக்குள் அழைத்து சென்று சோதித்தபோது அவரது ஆசன வாய்க்குள் மறைத்து  வைத்திருந்த சிறிய பார்சலில் தங்க கட்டிகள் இருந்ததை கண்டு பிடித்தனர்.
பரிஜானா மற்றும் சதக்கத்துல்லா ஆகிய 2 பேரிடம் இருந்து 967 கிராம் தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹38.37 லட்சம். இதையடுத்து 2 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்நிலையில், துபாயில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு ஏர் இந்தியா விமானம் சென்னை வந்தது. அதில், ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது சர்ஜூன் (30), அன்பழகன் கருப்பையா (61), அப்துல் நசீர் (26), சாகுல் அமீது (37) ஆகிய 4 பேரும்  துபாய்க்கு சுற்றுலா பயணியாக சென்று, சென்னை திரும்பி வந்தனர். சந்தேகத்தின் பேரில், இவர்கள் 4 பேரையும் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, அவர்களின் உள்ளாடைக்குள் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 343 கிராம் தங்க  கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் சர்வதேச மதிப்பு ₹53 லட்சம். இதையடுத்து இவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த  சோதனையில் ₹91.5 லட்சம் மதிப்புடைய 2.3 கிலோ கடதத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சென்னையை சேர்ந்த இளம்பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டது  குறிப்பிடத்தக்கது.



Tags : Dubai ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...