×

முதல்வர் திறந்து வைத்து 4 மாதங்களாகியும் 200 குடியிருப்புகளை ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்யாத பொதுப்பணித்துறை: அரசுக்கு லட்சக்கணக்கில் வருவாய் இழப்பு

சென்னை:  சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் தலைமை செயலகம், உயர் நீதிமன்றம், பொதுப்பணித்துறை மற்றும் பல்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்து வரும்  ஊழியர்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு தனித்தனியாக கட்டப்பட்ட கட்டிடங்கள் இடியும் தருவாயில் இருந்ததால், அங்கு வசித்து வந்த அரசு ஊழியர்கள் தங்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்ைக  வைத்தனர். இதை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்ட 700 வீடுகளில் அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர், அந்த பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட பொதுப்பணித்துறை முடிவு செய்தது.
அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு ரூ.75.76 கோடி செலவில் ஏ மற்றும் பி பிரிவு அலுவலர்களுக்காக தலா 100 குடியிருப்புகள் கொண்ட இரண்டு தளங்கள் கட்டப்படும், என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பின்னர், பொதுப்பணித்துறை  சார்பில் உடனடியாக டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் மூலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இதற்கான பணி முடிவடைந்தது. ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் உடனடியாக அந்த கட்டிடத்தை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த  நிலையில், கடந்த ஜூன் 20ம் தேதி இந்த கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து இந்த கட்டிடங்களில் முன்பதிவு செய்த அரசு அலுவலர்களிடம் முன்னுரிமை அடிப்படையில் ஒப்படைக்க வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அந்த பட்டியல் தயாரிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், கட்டிடங்களை திறந்து 4 மாதங்களாகியும் தற்போது வரை பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு வாடகை மூலம் கிடைக்க வேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள்  தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறுகையில், ‘‘அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு கிடைக்காததால் வெளியே வாடகை எடுத்து வசித்து வருகிறோம். இதனால், ஆண்டுக்கு லட்சக்கணக்கில் வாடகைக்கு செலவாகிறது. அரசு  ஊழியர்கள் குடியிருப்பில் வீடு கிடைத்தால் எங்களுக்கு வாடகை மிச்சமாகும். அதே நேரத்தில் சென்னை மாநகரின் மையப்பகுதியில் இந்த குடியிருப்பு உள்ளதால் அரசு அலுவலகங்களுக்கு விரைந்து செல்ல முடியும்,’ என்றனர்.

Tags : Public Works Department ,residences ,opening ,government ,
× RELATED செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படவுள்ள...