×

அபார்ட்மென்ட் வீடுகளின் அட்ராசிட்டி சாலையில் ஓடும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் காரைக்குடி நகராட்சி மக்கள் கதறல்

காரைக்குடி, அக். 24: காரைக்குடி நகராட்சி பகுதியில் அபார்ட்மென்ட், லைன் வீடுகளில் இருந்து முறையற்ற வகையில் கழிவுநீர் வெளியேறுவதால் சாலைகளில் தஞ்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.காரைக்குடி நகராட்சி பகுதிக்கு உட்பட்டு 36 வார்டுகள் உள்ளன. இந்நகராட்சியின் மொத்த பரப்பளவு 13.75 சதுர கி.மீ. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 793 ஆகும். இங்கு 500க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவிலான தெருக்களும் 31 ஆயிரத்து 725 வீடு, வணிக நிறுவனங்கள் உள்ளன.நகராட்சி சார்பில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் கணக்கிடப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இதில் 25 சதவீதம் குடிநீர் தேவைக்கு மற்ற பிற தேவைகளுக்கும் பயன்படுத்தியது போக மீதமுள்ள 75 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கழிவுநீரோடு கலக்கிறது. நாள் ஒன்றுக்கு மக்கள் தொகை கணக்கின்படி 80 லட்சம் லிட்டர் (8எம்எல்டி) தண்ணீர் வெளியேறுகிறது.
கால்வாய்கள் வழியாக கழிவுநீர் காரைக்குடி கண்மாய்க்கு சென்று அங்கிருந்து தேனாற்றின் வழியாக வெளியேறும். காரைக்குடி நகராட்சியை பொறுத்தவரை மக்களின் தேவை, வளர்ச்சிக்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. பாதிக்கு மேற்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்களே இல்லாத அவலநிலை உள்ளது. பல்வேறு இடங்களில் சாலைகளில் தான் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது.

நகரின் வளர்ச்சிக்கு ஏற்பட தற்போது அப்பாட்மென்ட்டுகள் அதிகரித்துள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட அபார்ட்மென்ட்டுகள் உள்ளன. 25 ஆயிரம் சதுரஅடி வரை சிவகங்கை நகர ஊரக அமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்திலும், அதற்கு மேல் சென்னை நகர்புற ஊரக அமைப்பிலும் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு அபார்ட்மென்டுகளிலும் 12 முதல் 36 வீடுகள் வரை உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுநீரை முறைப்படி கழிவுநீர் சேகரிப்பு தொட்டி (லீச் பிட்) அமைத்து அதில் விட வேண்டும். அல்லது கழிவுநீர் செல்ல எந்த பகுதியில் வாட்டம் உள்ளதோ அதுவரை நகராட்சியில் அனுமதி பெற்று கால்வாய் கட்டி வெளியேற்ற வேண்டும்.ஆனால், இந்த விதிமுறைகளை எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. கழிவுநீர் கால்வாய்களில் நேரடியாக சேர்ந்துள்ளதால் தண்ணீர் முறையாக வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கிறது. பல்வேறு இடங்களில் சாலை ஓரங்களிலும், வீடுகளுக்கு முன்பும் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனை நகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்வது இல்லை. இதனால் கொசு பிரச்னை உள்பட பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,`` அபார்ட்மென்ட் வீடுகளின் எண்ணிக்கை ஏற்ப அனுமதி பெற்றவுடனேயே நகராட்சிக்கு உரிய `கவனிப்பு’ சென்று விடுகிறது. அதனால் என்ன செய்தாலும் யாரும் கண்டுகொள்வது இல்லை. அதேபோல் லயன் வீடுகளில் இருந்தும் அதிக அளவில் தண்ணீர் வெளியேறி ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து வருவதோடு பல்வேறு விதமான நோய்கள் பரவி வருகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காரைக்குடி நகராட்சியில் தொற்றுநோய் பரவாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : residents ,Karaikudi ,apartment houses ,apartments ,
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!