×

ஆன்மிக மலர் களை கட்ட தொடங்கியது தீபாவளி வியாபாரம்

சிவகங்கை, அக். 24: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஜவுளி, மளிகை கடைகளில் தீபாவளியையொட்டி வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி பகுதியில் பெரிய அளவிலான ஜவுளி ஷோரூம் கடைகள் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் என்பதால் அனைத்து கிராமங்களில் இருந்தும் அருகில் உள்ள பெரிய ஊர்கள், நகரங்களில் உள்ள கடைகளில் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்குவது வழக்கம். மேலும் ஏராளமானோர் மதுரை சென்று ஜவுளி எடுத்து வருவர். கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவதால் பகல் நேரங்களில் கடைகளில் கூட்டம் அதிகம காணப்படுகிறது.அக்.27ல் தீபாவளி பண்டிகை என்பதால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது. இதையடுத்து கடந்த சில தினங்களாகவே சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, திருப்பத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஜவுளி மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் கூட்டம் அதிகரித்து வருகிறது. சாலையோரங்களில் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலும் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஜவுளி வாங்க மதுரை செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வர்த்தகர்கள் கூறியதாவது: இம்மாவட்டத்தில் கிராமங்கள் அதிகம் என்பதால் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பு மட்டுமே அதிகமான வியாபாரம் இருக்கும். இந்த ஆண்டு விவசாயத்திற்கு நம்பிக்கை தரும் வகையில் மழை பெய்திருப்பதால் கடந்த சில நாட்களாகவே வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இந்த ஆண்டு கடந்த ஆண்டுகளைப்போல் இல்லாமல் கூடுதல் வியாபாரம் இருக்கும் என எதிர்பார்க்கறோம். தீபாவளிக்கு ஜவுளி உள்ளிட்ட பொருட்கள் வாங்குபவர்களோடு, ஏராளமானோர் வேடிக்கை பார்க்க வருகின்றனர்’ என்றனர்.

Tags :
× RELATED உலக புத்தக தின விழா