×

திருப்புத்தூர் அருகே “விருந்தினருக்காக வெடி இல்லாத தீபாவளி” கிராமத்தினருக்கு கலெக்டர் இனிப்பு வழங்கி பாராட்டு

திருப்புத்தூர், அக். 24: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரிலிருந்து 15.கி.மீ தொலைவில் மதுரை செல்லும் ரோட்டில் உள்ள வேட்டங்குடிபட்டி & கொள்ளுக்குடிப்பட்டி கிராமத்திற்கு விருந்தினர்களாக வந்திருக்கும் வெளிநாட்டுப் பறவைகளுகாக வெடி இல்லாத தீபாவளியை 47 ஆண்டுகளாக அக்கிராமத்தினர் கட்டுப்பாடுடன் கடைப்பித்து வருகின்றனர். வேட்டங்குடிபட்டி அருகேயுள்ள கொள்ளுக்குடிப்பட்டியில் 17 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது பறவைகள் சரணாலயம். இந்த பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் தங்களது இனப்பெருக்கத்திற்காக வந்து தங்கியுள்ளன. இவை பர்மா, மலேசியா, கொரியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன், நார்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து, நைட் ஹெரான், கிரே ஹெரான், பாண்ட் ஹெரான், கேட்டில் ஈக்ரெட், பெயிண்டட் ஸ்டார்க், லிட்டில் ஈக்ரெட், ஓபன் பில் ஸ்டார்க், வொயிட் ஐபீஸ், பிளாக் ஐ பீஸ், கிளாஸி ஐ பீஸ், ஸ்பூன் பில், ஸ்பாட் பில் டக், ப்ளு விங்க்ட் டீல், லார்ஜ் கார்மெண்ட், ஸ்நேக் பேர்ட் உள்ளிட்ட கொக்கு நாரை, வாத்து இனங்களைச் சேர்ந்த பறவைகள் இக்கண்மாய்க்கு செப்டம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை இனப்பெருக்கத்திற்காக வரும்.

இங்கு வரும் பறவைகள் இக்கண்மாயில் தண்ணீரில் நிற்கும் மரங்களில் கூடு கட்டி முட்டை இட்டு குஞ்சு பொரிக்குது. இந்த பறவைகளுகாக இங்குள்ள கிராமத்தினர், கண்மாய்க்குள், வேட்டைக்காரர்கள் யாரேனும் வந்தால் அனுமதிப்பதில்லை. மேலும் பறவைகளின் கூட்டிலுள்ள முட்டைகளை திருடிச்செல்ல வரும் குரங்குகளையும், காக்கைகளையும் கண்காணித்து விரட்டுகின்றனர்.அதன் மீது கொண்டுள்ள அன்பாலும், அக்கறையாலும், தங்களது கிராமத்திற்கு வந்த விருந்தினர்கள் என்ற முறையிலும் அவைகளை அறவனைக்கும் பொருட்டு, கடந்த 47 ஆண்டுகளாக தீபாவளிக்கோ அல்லது அக்கிராமத்தில் நடைபெறும் நல்லது கெட்டதுக்கோ கூட வெடி வெடிப்பதில்லை. சத்தம் ஏதும் கேட்டால் கூட்டிலிருந்து குஞ்சுகள் தண்ணீரில் விழுந்து விடுமோ என்ற தாய் அன்போடு கொண்ட அக்கறையால்தான் இப்படி 47 ஆண்டுகளாக இக்கிராமத்தினர் ஒற்றுமையாக இக்கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றனர்.இந்நிலையில், அக்கிராமத்திற்கு நேற்று சென்ற கலெக்டர் ஜெயகாந்தன், தீபாவளி பண்டிகைக்கு வெடி வெடிக்காமல் ஒன்றுமையாக பல ஆண்டுகளாக இருந்து பறவைகளை நேசிப்பதால், அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக கிராமத்தினர் அனைவருக்கும் இனிப்பு வழங்கி பாராட்டினார். மேலும் கிராமத்தினர் தண்ணீர் வசதி, பஸ் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு கலெக்டர் கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதில் மாவட்ட வன அலுவலர் ரமேஸ்வரன், வனசரக அலுவலர் மதிவாணன், திருப்புத்தூர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சங்கர் மற்றும் சிங்கம்புணரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Deepavali ,Tiruputhur ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்