×

டிரைவருக்கு கொலை மிரட்டல் அரசு போக்குவரத்து மேலாளர் மீது வழக்குப்பதிவு

கம்பம், அக். 24: கம்பம் அரசு போக்குவரத்து கழகத்தில், கூடுதல் பணிக்கு மிகை ஊதியம் கேட்ட டிரைவருக்கு கொலைமிரட்டல் விடுத்த மேலாளர் மீது, கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கம்பத்தில் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு கிளைகள் பணிமனைகளுடன் செயல்பட்டு வருகின்றன. கம்பம் கிளை இரண்டில் சுமார் நாநூற்றி அறுபது தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இக்கிளையில் ஜெயமங்கலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் டிரைவராக உள்ளார். இவர் மோட்டார் வாகன சட்டப்படி 8 மணிநேரப் பணி என்ற விதியின் கீழ் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் பணி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை 28ம் தேதி, கம்பம் - திண்டுக்கல் வழித்தடத்தில் பேரிகாட், வேகத்தடை, போக்குவரத்து இடையூறுகள் அதிகமாக இருப்பதால் நிர்வாகம் ஒதுக்கிய நேரத்தில் திண்டுக்கல் செல்ல முடியவில்லை. உரிய நேரத்திற்கு மேல் பணி செய்தால் தனக்கு முறையான மிகை ஊதியம் வழங்க வேண்டும் என பாலகிருஷ்ணன் கிளை மேலாளர் பாண்டியராஜன்(52) இடம் கூறி உள்ளார். அதற்கு மேலாளர் பாண்டியராஜன் மிகை ஊதியம் தரமுடியாது எனக்கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

எனவே, மேலாளர் பாண்டியராஜன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாலகிருஷ்ணன் உத்தமபாளையம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்பேரில் கம்பம் வடக்கு போலீசார் மேலாளர் பாண்டியராஜன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் போக்குவரத்து தொழிலாளர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்குப்பின் பாண்டியராஜன் அரசு போக்குவரத்துக் கழகம் பெரியகுளம் கிளை மேலாளராகவும், டிரைவர் பாலகிருஷ்ணன் தேனிக்கும் பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : State Transport Manager ,
× RELATED மூதாட்டி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது