தேனி மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணி

தேனி, அக். 24: தேனி மாவட்டத்தில் நடந்து வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை சுகாதார துணை இயக்குனர் (தடுப்பூசி) சேகர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கர்ப்பிணி நிதி உதவி திட்டப்பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்.

தேனி மாவட்டத்தில் காய்ச்சல் கடுமையாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பெரியகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சிகள், வருவாய்த்துறை இணைந்து இப்பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுகாதார இணை இயக்குனர் (தடுப்பூசி) சேகர், மதுரை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அர்ஜூன், திண்டுக்கல் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் ஜெகவீரபாண்டியன், பழனி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் சோமசுந்தரம், தேனி மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வரதராஜன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று தேவதானப்பட்டி பேரூராட்சியில் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்தனர். அங்கு கர்ப்பிணிகளை சந்தித்து பேசினர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ நிதி உதவி திட்டத்தில் நிதி கிடைக்க தாமதமாவதாக கர்ப்பிணிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இதே ஆய்வு நடந்தது.

அங்கு நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு மருத்துவ நிதி உதவி திட்டம் வழங்கும் பணியில் 43வது இடத்தில் இருந்த தேனி மாவட்டம் நடப்பு ஆண்டு 30ம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இருப்பினும் இத்திட்டப்பணிகளை தீவிரப்படுத்தி மாநிலத்தில் முதல் 10 இடங்களுக்குள் தேனி மாவட்டம் இடம் பெற வேண்டும் தாமதமின்றி நிதி உதவிகளை அளிக்க வேண்டும். தவிர டெங்கு கொசுப்புழு மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் ‘ என அறிவுறுத்தினர்.

Related Stories:

>