×

கம்பம் பிரதான சாலையில் மீண்டும் `ஒன்வே’ அமல்

கம்பம், அக். 24: கம்பத்தில் ஒருவழிப்பாதையில் சேதமடைந்த சாலை சரி செய்யப்பட்டதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நகரின் பிரதான சாலையில் மீண்டும் போலீசார் ஒரு வழிப்பாதையை அமல்படுத்தியுள்ளனர். கம்பம் மெயின்ரோடு சிக்னலிலிருந்து, ஏகேஜி திடல்வரை மெயின்ரோட்டின் இருபுறமும் கடைகள் என நெருக்கடியான பகுதியாக இருந்ததால் அடிக்கடி வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சிக்னலில் இருந்து காளியம்மன் கோயில் வரை ஒரு வழிப்பாதையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி குமுளி மற்றும் தேனியில் இருந்து கம்பம் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் காளியம்மன் கோயிலில் இருந்து ஆடு அடிக்கும் தொட்டி அருகேயுள்ள சேனை ஓடை பாலம் வழியாக சென்று வந்தன.

இந்த நிலையில் கடந்த மாதம் இந்த பாலத்தை ஒட்டியுள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் வழிப்பாதையை போலீசார் விலக்கிகொண்டனர். இதனால் நகரின் பிரதான சாலையில் மீண்டும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தினர் சேதமடைந்த சாலையை சரிசெய்தனர். சாலை மற்றும் பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய நகராட்சி ஆணையாளர் கமலா, கட்டிட ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் பொறியாளர்களுக்கு உத்தவிட்டார். இதையடுத்து பாலத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், பாலம் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததையடுத்து, பாலத்தில் வாகனங்கள் செல்லலாம் என நகராட்சி ஆணையர் உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் நேற்று முதல் மீண்டும் இந்த ஒருவழிப்பாதை வழியாக பஸ், லாரி, கார், சரக்கு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து காளியம்மன் கோயில் பிரிவில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தக்ஷணாமூர்த்தி, எஸ்ஐ வினோத்ராஜா மற்றும் போலீசார் ஒருவழிப்பாதை அமல்படுத்தியது குறித்து வாகன ஓட்டிகளிடம் தெரிவித்து, அவ்வழியாக வாகனங்களை அனுப்பி வைத்தனர். 

Tags : Kambam ,Oneway' Amal ,road ,
× RELATED நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை;...