×

தீபாவளி பண்டிக்கைக்கு பனைமர பொருட்கள், மண்பாண்ட பொருட்கள் விற்பனை ஜோர்

சாயல்குடி, அக். 24: சாயல்குடி பகுதியில் தீபாவளி பண்டிகையையொட்டி பனைமர பொருட்கள், மண்பாண்ட பொருட்களுக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.சாயல்குடி அருகே கன்னிராஜபுரம், நரிப்பையூர் முதல் தனுஷ்கோடி வரையிலான உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.கடந்த 6 வருடங்களுக்கு மேலாக போதிய மழையின்றி, வறட்சி நிலவி வருவதால், பனை மரத்தொழில் நலிவடைந்து வருகிறது. தொழிலாளர்கள் பிரதானமாக செய்யக்கூடியதும், வருமானம் தரக்கூடியதுமான மரத்தை சீரமைத்து, பதனீர் இறக்கி, கருப்பட்டி உற்பத்தி செய்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் மரத்தின் உரிமையாளர்கள் மட்டைகளிலிருந்து நார் பிரித்தெடுத்தல், மட்டை காம்பவுன்ட் அமைத்தல், வீடு வேயுதல் மற்றும் இதர உபயோகத்திற்கு ஓலை வெட்டுதல், கட்டிட உபயோகம், சேம்பர், காலவாசல் உள்ளிட்ட பயன்பாட்டிற்காக பனைமரங்களை வெட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தொழில் இன்றி இருக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பனை மர பொருட்களிலிருந்து பனை விசிறி, தொப்பி, மிதியடி, சுலவு, பொட்டி வகைகள், கொட்டான், பணப்பை, செல் கவர் உள்ளிட்ட வீட்டுஉபயோக பொருட்கள் மற்றும் வீடு அழகு சாதன பொருட்களை தயார் செய்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சலுகை விலையில் விற்று வருகின்றனர்.இதுகுறித்து பனை மர தொழிலாளர்கள் கூறும்போது, ‘பனைமரத்தின் முக்கிய தொழில் கருப்பட்டி தொழிலாகும், சீசன் முடிவுற்றதால், தொழிலின்றி குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. மாற்று தொழில் தெரியாததால் பனைமரத்தின் பொருட்களை கொண்டு வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்று வருகிறோம்.ஓலையில் குறுத்து ஓலை, சாரோலை, சுருக்கோலை, கிழிஓலை என நான்கு வகை ஓலைகள் உள்ளன. இதனை கொண்டு ஆறு வகை பொட்டிகள், கொட்டான்கள், விசிறி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கிறோம். பனை நாரிலிருந்து சுலவு, மிதியடி, துடைப்பான், செல்கவர், பணப்பை, பெண்கள் கைப்பை உள்ளிட்டவற்றை தயாரிக்கிறோம்.

பனை ஓலைகள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சென்னை, திண்டுக்கல், தேனி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு வியாபாரிகள் நேரடியாக வாங்கிச் செல்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் இங்குள்ள மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிச்சென்று சந்தையில் விற்று வருகின்றனர். ஓரளவிற்கு இந்த தொழில் வருவாய் ஈட்டி தரும் தொழிலாளக நடந்து வருகிறது. இதனால் அரசு கடனுதவி செய்து, நவீனமுறையில் பொருட்களை தயாரிக்க பயிற்சியளித்து, தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவித்தால் நிரந்த தொழிலாக இந்த தொழில் மாறும். எனவே அரசு உதவி செய்ய முன்வரவேண்டும் என்றனர்.சாயல்குடி மகளிர் சுயஉதவி குழு பெண்கள் கூறும்போது, ‘மாவட்டத்தில் அதிகமாக சாயல்குடி பகுதியில் பனைமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன. பனைமரம் ஏறுதல், பாலை சீவுதல், பதனீர் இறக்குதல், ஓலை சீவுதல் உள்ளிட்ட தொழில் ஆண்கள் ஈடுபட்டு வருவதால், அவர்களுக்கு துணையாக பனைமர உபயோக பொருட்கள் தயாரிப்பு தொழிலில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு வருவாய் ஈட்டிதரும் தொழிலாக உள்ளது. இதனால் அவர்களிடம் ஆர்டர் செய்து வாங்கி வெளிச்சந்தையில் விற்கிறோம். இதனுடன் கருப்பட்டி, பனங்கற்கண்டு மண் குடுவைகள், மண் தண்ணீர் ஜக், மண் டம்ளர், மண் பலகார சாமான்கள் விற்கப்படுகிறது. பாராம்பரிய பனைமர பொருட்கள், மண்பாண்டங்கள், பாராம்பரிய உணவு பொருட்களை கட்டுபடியாகும் விலையில் சந்தையில் விற்பதால் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது தீபாவளி சீசன் என்பதால் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது’ என்றனர்.

Tags : Jore ,festival ,Diwali ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...