×

கொட்டாம்பட்டி பகுதியில் மழைநீர் சேகரிப்பு போல் உறிஞ்சுகுழி தொட்டி அமைப்பு

மேலூர், அக். 24: கொட்டாம்பட்டி ஊராட்சிகளில் கழிவுநீரை சுத்திகரிக்கும் வகையில் உறிஞ்சு குழி வீடுகள் தோறும் அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் முறையான வடிகால் வாய்க்கால்கள் இல்லாமல் சாக்கடை நீர் சாலைகள் ஓரத்தில் தேங்கி சுகாதாரக்கேட்டை உருவாக்கி வருகிறது. இவற்றில் இருந்து விடுபட சாக்கடை வசதிகள் இல்லாத அனைத்து வீடுகளிலும் உறிஞ்சு குழிகள் அமைக்க அரசு முடிவெடுத்தது. மழை நீரை சேமிப்பதற்கு அமைக்கப்படுவது போல் குழிதோண்டி அதில் வட்ட வடிவிலான சிமெண்ட் சிலாப்கள் அமைக்கப்படுகிறது. பின்னர் கழிவுநீரை வடிகட்டி பூமிக்குள் செலுத்தும் வகையில் கூழாங்கற்கள், மணல் கொண்டு அந்த தொட்டி நிரப்பப்படுகிறது. இதில் வீடுகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை விட்டால், அது வடிகட்டப்பட்டு நல்ல தண்ணீர் பூமிக்கடியில் சென்று நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை தனியாருக்கு டெண்டர் விட்டு இதுபோன்ற உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது கலெக்டர் உத்தரவுப்படி இப்பணிகளை அந்தந்த கிராமங்களில் உள்ள சுய உதவிக் குழு பெண்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு உறிஞ்சு குழிக்கு ரூ.7 ஆயிரத்து 900 வழங்க அரசு முடிவு செய்துள்ளது.இந்த உறிஞ்சு குழிகளை அமைப்பது குறித்து கொட்டாம்பட்டி யூனியன் அலுவலகத்தில் செய்து காண்பிக்கப்பட்டது.
பிடிஓ வேலவன் கூறியதாவது, கழிவுநீர் ஆங்காங்கே தேங்காமல் இந்த உறிஞ்சு குழிக்குள் விடும் போது, சுகாதாரமும் நன்றாக இருக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். கொட்டாம்பட்டி ஒன்றியதில் வலைச்சேரிபட்டியில் மொத்தம் உள்ள 170 வீடுகளில் இது வரை 150 வீடுகளுக்கு இந்த உறிஞ்சு குழிகள் அமைக்கப்பட்டு விட்டது. மாடல் கிராமமாக அதை முன் நிறுத்தி கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இது படிப்படியாக அமைக்கப்படும். இனி தனிநபர் டெண்டர் இல்லாமல் அந்தந்த கிராமத்தை சேர்ந்த சுய உதவி குழுவினருக்கே இப்பணிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags : rainwater harvesting ,area ,Kottampatti ,
× RELATED கடனை கேட்டு பெண்ணை தாக்கிய 4 பேர் கைது