×

திரையரங்கங்கள், உணவகங்களில் டெங்கு கொசுப்புழு உருவாவதை தடுக்க வேண்டும்

திண்டுக்கல், அக்.24: திரையரங்கங்கள், உணவகங்கள், தேநீர்  கடைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார். திண்டுக்கல் மாவட்டம், டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.திண்டுக்கல் மாவட்டத்தில், டெங்கு தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கலெக்டர் விஜயலட்சுமி தலைமை வகித்து பேசுகையில், ‘‘திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை பெய்து வருகின்ற சூழ்நிலையில், பொதுமக்கள் சுகாதாரமற்ற தண்ணீரை குடிப்பதால் தொற்றுநோய் பரவுவதற்கும் மற்றும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக பராமரிக்காவிட்டால் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேங்காய் ஓடு, பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றின் மூலம் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளதால் அதனை உடனடியாக அகற்றிட வேண்டும். தண்ணீர்  தொட்டிகளை மூடி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் உபயோகிக்கும் குளிர்சாதனப் பெட்டிகளில் பின்புறம் முறையாக சுத்தம் செய்து வைத்திட வேண்டும். கால்நடை மற்றும் கோழிவளர்ப்பு அதிகமுள்ள பகுதிகளில், பொது இடங்களில் சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். புதிதாக கட்டிக்கொண்டிருக்கும் கட்டிடங்களில் தண்ணீர் தேங்கா வண்ணம் கவனிக்க வேண்டும்.அனைத்து வட்டார வளர்ச்சி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களும் கொசு மருந்து தெளிப்பான் இயந்திரத்தை  ஒருவார காலத்திற்குள்  பழுது பார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தொடர் சுழற்சி முறையில் கொசு மருந்து தெளிக்க வேண்டும்.
 
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிக்கப்பட்டு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் ரத்தம் மாதிரிகள் எடுத்து, டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா, எலிக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறி உள்ளனவா என்பதை பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான மருந்துகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோயின் விபரங்களை கண்டறிந்தவுடன், துணை இயக்குநர்(சுகாதாரப்பணிகள்) அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். காய்ச்சல் சிசிச்சைக்கான மருந்துகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எல்லா கிராமங்களிலும் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். டெங்கு பாதிப்பு குறித்த அறிக்கைகளை உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் இயக்குநருக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஊராட்சி பகுதிகளில் டெங்கு பாதித்த பகுதிகளில் கொசுப்புழு மருந்து தெளிக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்து, உலர வைத்து அதன்பின்னர் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். குடியிருப்புகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கட்டிடங்கள், விடுதிகள், திரையரங்கங்கள், உணவகங்கள், தேநீர் கடைகளில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் வளர்வதற்கான இடங்கள் உள்ளனவா என்பதை கண்காணித்து, கொசுப்புழுக்கள் உருவாவதை தடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர்  கவிதா, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) திண்டுக்கல் மற்றும் பழநி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : spread ,dengue mosquitoes ,restaurants ,theaters ,
× RELATED எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை