×

சிறை காவலர்களுடன் மோதல் வழக்கு நீதிமன்றத்தில் 3 கைதிகள் ஆஜராகி புகார்

திருச்சி, அக்.24: திருச்சி மத்திய சிறையில் மோதல் வழக்கில் 3 கைதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி போலீசார் மீது புகார் கூறி மனு அளித்தனர்.
திருச்சி மத்திய சிறையில் பிளாக் எண் 6ல் அடைக்கப்பட்டு இருந்த தண்டனை கைதிகள் மதன்குமார், ஸ்ரீதரன் இவர்கள் இருவரையும் கடந்த 5ம் தேதி சிறை வார்டன்கள் புண்ணியமூர்த்தி மற்றும் முருகானந்தம் ஆகியோர் வேறு பிளாக்கிற்கு மாற்றுவதற்காக அழைத்து சென்றனர். அப்போது அதே பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரையில் சிறையில் அடைக்கப்பட்டு மீண்டும் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்ட விசாரணை கைதிகளான மதுரையை சேர்ந்த கார்த்திக்(32), திருமுனியசாமி(29), காரைக்குடியை சேர்ந்த திருச்செல்வம்(37), ஆகியோர் கைதிகளை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் திடீரென வார்டன் புண்ணியமூர்த்தியை அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து புண்ணியமூர்த்தி சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் பற்றி ஜெயிலர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார், கைதிகள் கார்த்திக், திருமுனியசாமி, திருச்செல்வம் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து 3 கைதிகளும் ஆறரை என்ற சிறப்பு செல்லுக்கு மாற்றப்பட்டனர். மேலும் வார்டன்களை தாக்கியதால் 3 கைதிகளுக்கும் சிறையில் டீ, காபி வழங்குவது நிறுத்தப்பட்டது. 100 நாட்களுக்கு உறவினர்களை சந்திக்கும் வாய்ப்பும் சிறைத்துறையால் மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் போலீசாருடன் மோதலின்போது கைதிகள் முனியசாமிக்கு மண்டை உடைந்தும், கார்த்திக்கிற்கு கையில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிறை மருத்துவமனையில் போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. இது குறித்து 3 பேருக்கும் வக்கீலான திவாகர் என்பவர் கைதிகளை தாக்கிய சிறை போலீசார், சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இலவச சட்டஉதவி மையத்தில் கடந்த 15ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் நடந்தது. இதற்காக 3 கைதிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 3 பேரும் தனித்தனியாக நீதிமன்றத்தில் புகார் மனு அளித்தனர். இதில் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் திரிவேணி, கைதிகளை தாக்கிய சிறை காவலர்கள் 2 பேர் மற்றும் சரியான சிகிச்சை அளிக்காத சிறை மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி நடவடிக்ைக எடுக்க கோரி கே.கே.நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags : prisoners ,court ,prison guards ,
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...