×

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்புடன் பட்டாசு வெடிக்க விழிப்புணர்வு

திருச்சி, அக்.24: திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பும், தீபாவளி அன்றும் தொடர்ந்து வருகின்ற நாட்களில் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். இதை கருத்தில் கொண்டு தீபாவளி மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பு தீபாவளியாக அமைய திருச்சியில் நேற்று ஜோசப் கண் மருத்துவமனை மற்றும் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தீ விபத்து ஏற்பட்டால் அதற்கான முதலுதவி குறித்து செயல்முறை விளக்கம் பள்ளி மாணவர்களிடையே செய்து காண்பிக்கப்பட்டது. தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி செய்வது எப்படி, கண்களில் தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தீபாவளியன்று ஜோசப் கண் மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் 40 முதல் 60 பேர் கண்ணில் ஏற்பட்ட தீக்காயத்திற்காக வந்து முதலுதவி சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் பெரும்பாலானோர் 10 முதல் 20 வயதுக்குட்பட்டவர்கள். துரதிஷ்டவசமாக இந்த விபத்தில் பார்வை இழந்தவர்களும் உண்டு. இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் நோக்கத்துடன் இந்த விழிப்புணர்வு, பாதுகாப்பு ஒத்திகை பள்ளி மாணவர்களிடையே செய்து காட்டியது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு துறை துணை அதிகாரி கருணாகரன், ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் நெல்சன் ஜேசுதாசன், டாக்டர்கள் தனுஜா பிரிட்டோ, அகிலன் அருண்குமார் மற்றும் திரளான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

Tags : Joseph Eye Hospital ,Trichy ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...