×

தமிழக அரசை கண்டித்து நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு

திருச்சி, அக்.24: தமிழக அரசை கண்டித்து நாளை (25ம்தேதி) முதல் தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திடபோவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளனர். தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவர்களும் காலமுறை ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் பணியிடங்களை உயர்த்த வேண்டும். அரசு பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வேண்டும். அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு (FOGDA) நீண்ட நாட்களாக தொடர் போராட்டங்கள், மனித சங்கிலி, ஊர்வலம், தர்ணா, தொடர் உண்ணாவிரதம் என பல வகையில் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ஆக. 27 அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதில் 14,000 மருத்துவர்கள் பங்கேற்று பணிகளை புறக்கணித்தனர். அன்று நடந்த பேச்சுவார்த்தையில் 6 வார காலத்திற்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. பின்பு இடைத்தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதாக கூறப்பட்டது.

அனைத்து வகை ஜனநாயக வழியிலான அறப்போராட்டங்களை நடத்தியும், தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாக்குறுதியை நிறைவேற்ற மறுப்பதால், வேறு வழியின்றி அக்.25 (நாளை) முதல் மாநிலம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளதாக (FOGDA) அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மணப்பாறை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ஈஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகள், திருச்சி சுகாதார மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருந்தகம் என சுமார் 500 அரசு மருத்துவர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள். பொதுமக்கள் நலன் கருதி உயிர் காக்கும் அவசர சிகிச்சை பிரிவும், மகப்பேறு மருத்துவப்பிரிவும் காய்ச்சல் பிரிவு மட்டும் செயல்படும். திருச்சி மாவட்ட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் அருளீஸ்வரன், பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கின்றனர்.

Tags : Government doctors ,strike ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து