பெரம்பலூர், அக்.24: பெரம்பலூரில் அனைத்துப் பிரிவினருக்குமான மாவட்ட அளவிலான, மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 740 பேர் பங்கேற்றனர். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான, மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள், நேற்று (23ம் தேதி) காலை 8.30மணிக்கு தொடங்கி நடைபெற்றது. போட்டிகளில் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என அனைத்துப் பிரிவினரும் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியில் தடகளம், நீச்சல், கையுந்து பந்து (வாலிபால்) மற்றும் கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டியில், 100 மீட்டர் ஓட்டம், 400மீட்டர் ஓட்டம், 1,500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டுஎறிதல் ஆகிய போட்டிகளும், வாலிபால் மற்றும் கபடி போட்டிகள் அனைத்துப் பிரிவினருக்கும் நடத்தப்பட்டது. நீச்சல் போட்டிகள் 50மீ, 100 மீ, 200 மீ, 400மீ ப்ரீ ஸ்டைல், 50மீ பேக் ஸ்ட்ரோக், 50மீ ப்ரஸ்ட் ஸ்ட்ரோக், 50மீ பட்டர் பிளை ஸ்ட்ரோக் மற்றும் 200மீ இன்டிவி ஜுவல் மிட்லே ஆகிய போட்டிகள் அனைத்துப் பிரிவினருக்கும் நடத்தப்பட்டது. இதில் கபடி விளையாட்டுப் போட்டியில் 28அணிகளும், வாலிபால் விளையாட்டுப் போட்டியில் 19 அணிகளும் கலந்து கொண்டன. மொத்தம் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், பொதுநிலை யினர் என மாவட்ட அள வில் 740பேர் பல்வேறு விளையாட்டுப் போட்டிக ளில் கலந்துகொண்டனர்.