×

ஈரோடு பெண்ணிடம் நூதன மோசடி வாலிபரை கஸ்டடி எடுத்து போலீஸ் விசாரணை

ஈரோடு, அக்.24:ஈரோட்டில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு, ரூ.43 ஆயிரம் திருடி கைதான வாலிபரை, கஸ்டடி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், திருடிய பணத்தில் தங்க நகைகளை வாங்கியது தெரியவந்தது.ஈரோடு எஸ்.கே.சி. ரோடு மொசுவண்ணவீதியை சேர்ந்தவர் ரவீந்தரன் மனைவி லதா (43). இவர், பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர், கடந்த மாதம் 26ம் தேதி காலை காந்திஜி ரோட்டில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றார்.அப்போது, லதாவின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் வராததால், அங்கு வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், லதாவிடம் உதவி செய்வதாக கூறி பணம் எடுத்து கொடுத்தார். ஆனால், லதாவின் ஏடிஎம் கார்டை கொடுப்பதற்கு பதிலாக, அந்த நபர் வைத்திருந்த வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்து விட்டு, லதா சென்றதும் அதே ஏடிஎம் மையத்தில் இருந்து, லதாவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்த ரூ.43 ஆயிரத்தையும் அந்த மர்மநபர் திருடிக்கொண்டு தப்பி சென்றார்.இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் லதா புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

அதில், அந்த வாலிபர், வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி குளக்கரை தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அருண்குமார் (30) என தெரியவந்தது. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே, அருண்குமார், கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் இதேபோல் நூதன மோசடியில் ஈடுபட்டதால், அந்த மாநில போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.இதையடுத்து ஈரோடு சூரம்பட்டி போலீசார், கர்நாடகா மாநில நீதிமன்ற அனுமதியின்பேரில், கடந்த 18ம் தேதி அருண்குமாரை கைது செய்து, ஈரோடு ஜூடீசியல் மாஜிஸ்திரேட் (எண் 3) கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்டம் கோபி சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட அருண்குமாரை போலீசார், நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், நேற்று முன்தினம் கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தினர். இதில், அருண்குமார், லதாவிடம் திருடிய பணத்தில் தங்க மோதிரம் வாங்கியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த மோதிரத்தை பறிமுதல் செய்தனர். அருண்குமாரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : fraudster ,
× RELATED நிலம் வாங்கி தருவதாக கூறி 10 லட்சம் மோசடி செய்தவர் கைது