×

நீலகிரி காலநிலையில் மாற்றம் சூடுபிடித்தது தீபாவளி வியாபாரம்

ஊட்டி, அக்.24: நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தால் நேற்று முதல் தீபாவளி பண்டிகை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஊட்டியில் மழை கொட்ட துவங்கியது. இதனால், ஊட்டி, குந்தா, குன்னூர் மற்றும் கோத்தகிரி போன்ற பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. குந்தா தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளிலே பாதிப்புகள் அதிகமாக இருந்தது. இந்நிலையில், கடந்த 21, 22 ஆகிய இரு நாட்கள் நீலகிரி மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் மிக அதிக கன மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைத்துத்துறை அலுவலர்கள் அடங்கிய 42 குழுக்கள் தயார் நிலையில் இருந்தன. இவர்கள் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யவில்லை.

ஊட்டி மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்தது.  இதனால் நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். ரெட் அலர்ட் காரணமாக தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் யாரும் ஆடைகள் மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்கு தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் மழை பெய்யாமல் காலநிலை மாறி காணப்படுவதால் நேற்று காலை முதல் மக்கள் தீபாவளி புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க கடை வீதிகளில் குவிந்தனர். ஊட்டி, குன்னூர் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தீபாவளி பண்டிகை வியாபாரம் நேற்று முதலே சூடுபிடித்தது.

Tags : business ,Nilgiris ,
× RELATED சாத்தான்குளம் அரசு கல்லூரியில்...