×

மயிலாடுதுறை பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் அபாயம்

மயிலாடுதுறை, அக்.24: நாகை மாவட்டம் மயிலாடுதுறை நகரில் பட்டமங்கலக் கடைவீதி, மகாதானத்தெரு, சின்னக்கடைவீதி, பெரியகடைவீதி, காந்திஜி சாலை, கச்சேரி சாலை பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் குவிந்து வருகின்றனர். துணிமணிகள், நகை, வெடி மற்றும் மளிகை போன்ற கடைகள் முன்பு அதிக அளவில் கூட்டம் அலைமோதி வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைபோல் விட்டுவிட்டு மழை பெய்து வருவது இந்த தீபாவளியின் போதுதான் என முதியோர் கூறுகின்றனர்.
தரைக்கடை வியாபாரிகள் 100க்கணக்கில் சாலையோரம் வியாபாரம் செய்து வருகின்றனர். மழைவரும்போது கடையை மூடிவிட்டு ஓரமாக ஒதுங்கிக் கொள்வதும், மழைவிட்ட பிறகு வியாபாரத்தை துவங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த நேரத்தில் மழைநீர் வடிகால் சரிசெய்ய இயலாததால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி வருகிறது. இவை ஒருபுறம் இருந்தாலும் நகரில் சேரும் குப்பைகளின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது.

தெருவில் பல்வேறு இடங்களில் குப்பைகளை கொட்டிவைப்பதை நகராட்சி மற்றும் தனியார் துப்புரவு நிறுவனத்தினர் குப்பைகளை சேகரித்தாலும், ஒருசில இடங்களில் குப்பைகள் குவிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக மயிலாடுதுறை நாராயணபிள்ளை கடைவீதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே நகராட்சி வரை செல்லும் குறுகிய சாலை உள்ளது. அந்த சாலையில் வாகனங்கள் சென்று வந்த நிலை மாறி, தற்பொழுது அந்த சாலை முழுவதும் குப்பைக் கூளங்களால் நிறைந்து காணப்படுகிறது. அதுவும் பல நாட்களாக குப்பைகள் சேர்ந்ததால் அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதுபோன்ற நகர் பகுதிகளில் குப்பைகள் சேருவதால் நகராட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு செல்லும் நேரத்தில் இதுபோன்ற குப்பை மேடுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். உடனே நகராட்சி நிர்வாகம் இதுபோல் நகர் முழுவதும் குவிந்துள்ள குப்பைகளை போர்க்கால அடிப்படையில் அகற்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : area ,Mayiladuthurai ,
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...