×

கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயிலில் 27ம் தேதி கந்தசஷ்டி விழா துவக்கம் நவ.2ல் சூரசம்ஹார நிகழ்ச்சி

கீழ்வேளூர், அக்.24: நாகை மாவட்டம் கீழ்வேளூர் சுந்தரகுஜாம்பிகை சமேத அட்சயலிங்கசுவாமி கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு கந்த சஷ்டி விழா வரும் 27ம் தேதி ஞாயிற்றுகிழமை தொடங்குகிறது. முருகன் சூரபத்மனை அழிக்க சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்காரம் செய்து அந்த பாவ தோஷம் நீங்க கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி கோயில் திருக்குளத்தில் நீராடி அட்சயலிங்க சுவாமிக்கு முன் அமர்த்து தவம் இருந்ததாகவும், அப்போது முருகனின் தவத்தின் போது கலையாமல் இருக்க காளிதேவதை நான்கு திசைகள் மற்றும் வான்பகுதி சேர்த்து 5 திசைகளிலும் காவல் காத்துள்ளார்.  இதனால் இங்குள்ள காளி அஞ்சுவட்டத்தமன் என்று பெயர் பெற்று அருள் பாலித்து வருகிறார். கோயில் திரு குளத்தில் குளித்து விட்டு அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மனை வழிப்பட்டால் பாவங்கள் போகும், தடைப்பட்ட திருமணங்கள், தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்த கோயில் கந்தசஷ்டி விழா 27ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து தினம்தோறும் பல்வேறு வாகனத்தில் சுப்பரமணிய சுவாமி வீதி காட்சி நடைபெறுகிறது. முக்கிய விழாவாக வரும் நவம்பர் 2ம் தேதி மதியம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு கீழ வீதியில் ஆட்டுக்கிடா வாகனத்தில் பாலசுப்பரமணிய சுவாமி எழுந்தளி சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மயில் வாகனத்தில் சுவாமி பிரகார புறப்பாடு நடைபெறுகிறது. மறு நாள் 3ம் தேதி சரவணப் பொய்கையில் தீர்த்தோற்சவம் நடைபெற்று, 4ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழா குழுவினர், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival ,Kandasasti ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...