×

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, அக். 24:  கோவையில் மின்வாரிய ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தில் ஐடிஐ படித்த கள உதவியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி கடந்த வருடம் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணி நியமனம் தள்ளிபோனது. இந்நிலையில், மின் வாரியத்திடம் மின் ஊழியர்கள் பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், மின்வாரியம் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. மேலும், மின் வாரியத்தில் கள உதவியாளர், கம்பியாளர், உதவிமின் பொறியாளர், உதவியாளர்கள், கணக்கீட்டாளர்கள் உள்பட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளது.

இந்த காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைச்சர் அறிவித்த 2,900 ஐடிஐ கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின் வாரியத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மின்வாரிய காலிப்பணியிடங்களில் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தலைமை மின் வாரிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு, மாநில துணை தலைவர் செபாஸ்டியன் தலைமை வகித்தார். டாக்டர் அம்பேத்கர் கல்வி மையத்தின் கணேஷ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் மதுசூதனன், மாநில துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Tags : Staff Demonstration ,
× RELATED பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்