×

பருவமழை காலம் முடியும் வரை அரசு அலுவலர்கள் தலைமையிடத்திலேயே தங்கி பணி மேற்கொள்ள வேண்டும்

கோவை, அக். 24:  கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர்சிங் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஹர்மந்தர்சிங் தெரிவித்ததாவது :வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் கோவை மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். கழிவுநீர் ஓடைகளை சீர்செய்து சாலைகளில் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கீழே விழும் மரங்களை உடனடியாக அகற்ற மரம் அறுக்கும் இயந்திரங்கள், மழை நீர் தேங்கும் இடங்களில் நீரை வெளியேற்ற மின் மோட்டார்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருக்கவேண்டும்.

மேலும் மழைநீர் சேகரிக்க ஏற்ற வகையில் மாவட்டத்திலுள்ள பெரும்பாலான குளங்கள் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரங்களில் உள்ள கிராமங்களில் உரிய முறையில் அறிவிக்கைகள் அளித்திட வேண்டும். மணல் மூட்டைகள் போதுமான அளவில் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மின்சார வாரிய அலுவலர்கள் மின் கம்பிகளிலுள்ள உள்ள பழுதுகள் உடனடியாக சரி செய்திட வேண்டும். பொது விநியோகத் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் பொருட்கள் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறையினர் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படா வண்ணம் சுகாதாரத்தினை பேணி காத்திட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மழை சேகரிப்பு குறித்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மழைநீர் சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக குளோரினேற்றம் செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்திடவேண்டும்.

சுகாதாரப்பணியாளர்கள் மூலமாக டெங்கு காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாக்கும் இடங்களை கண்டறிந்து தேவையற்ற பொருட்களை அப்புறபடுத்த அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் வீடு வீடாக சென்று  ஆய்வு மேற்கொள்ளவேண்டும். குப்பைகள் மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தவும் தண்ணீர் தேங்காத வண்ணம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.பொது கட்டிடங்கள், அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், உணவகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கட்டுமான பணிகள் நடைபெற்றும் வரும் இடங்கள் போன்ற பகுதிகளை பார்வையிட்டு கொசு உற்பத்தியாகாமல் சுத்தமாக உள்ளனவா? என்று சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.  இதுபோன்ற இடங்கள் சுகாதாரமின்றி இருந்தால் உடனடியாக அபராதம் விதிக்கவேண்டும். மேலும் டெங்கு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.  அனைத்து அரசு அலுவலர்களும் பருவமழை காலம் முடியும் வரை தலைமையிடத்திலேயே தங்கி தங்கள் பணியினை மேற்கொள்ளவேண்டும். பொதுமக்கள் மழைக்காலங்களில் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இருக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும். இவ்வாறு  ஹர்மந்தர்சிங் தெரிவித்தார்.

முன்னதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் தனிப்பிரிவு, உள்நோயாளி, புறநோயாளி, 24 மணி நேர குழந்தைகள் காய்ச்சல் புறநோயாளி பிரிவுகளை நேரில் பார்வையிட்டு ஹர்மந்தர் சிங் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென்று தனிசிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றிடவும், தொட ர்காய்ச்சலுடன் வரும் நோயாளிகளை 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணித்திடவும் மருத்துவமனையில் போதுமான அளவு மருந்துகள் இருப்பில் வைக்கவும் அரசு மருத்துவமனை முதல்வருக்கு அவர் அறிவுரை வழங்கினார். மேலும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கான டெங்கு நோய்த் தடுப்பு  மற்றும் சிகிச்சை முறைக்கான  கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் ராஜாமணி தலைமையில் நடைபெற்றது.

Tags : Government officials ,headquarters ,end ,monsoon season ,
× RELATED தேனியில் 2500 அரசு அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி