×

படிப்புக்கு தகுந்தவாறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம், அக். 24: படிப்புக்கு தகுந்தவாறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க வேண்டுமென கும்பகோணத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணம் ஆர்டிஓ அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. ஆர்டிஓ வீராச்சாமி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் சரவணன் பேசுகையில், ரயில் மற்றும் பஸ்களில் பயணம் செய்யவும், உதவியாளர்களை அழைத்து செல்லவும் இலவச பயண அட்டை வழங்க வேண்டும். பஸ்சுகளில் இறங்கி ஏறுவதற்கு கண்டக்டர்கள் ஒத்துழைப்பு தராததால் மிகவும் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து புகாரளித்தால் போக்குவரத்து நிர்வாகம் மதிப்பதில்லை.
மாற்றுத்திறனாளிகள் சான்று வாங்க விஏஓ அலுவலகத்துக்கு சென்றால் எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளை அலட்சியப்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறார்கள். மேலும் சிலர் எங்களிடம் பணத்தை கேட்டு பெற்று கொள்கிறார்கள். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகளை வழங்குவதுபோல் அந்தந்த கிராமங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிப்புக்கு தகுந்தவாறு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், ஜமாபந்தி, மக்கள் நேர்காணல் முகாம்களில் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து சரி செய்ய வேண்டும். காவல் துறையில் புகாரளிக்க சென்றால் அங்குள்ள போலீசார் எங்களை உதாசீனப்படுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச மனை பட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கூட்டத்தில் தாசில்தார் பாலசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் ரவீந்திரன், டாக்டர் ஜமரூல்கமான் மற்றும் கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

Tags : government ,persons ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...