×

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் தேங்கி நின்ற தண்ணீரில் டெங்கு கொசுக்கள் காண்ட்ராக்டருக்கு அபராதம் விதிப்பு கலெக்டர் அதிரடி

தஞ்சை, அக். 24: தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அங்கு தேங்கி நின்ற தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி இருந்ததால் காண்ட்ராக்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதைதொடர்ந்து கட்டுமான பணியை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். இதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ள கட்டுமான பொருட்கள், இரும்பு கம்பிகளில் பள்ளமான பகுதிகளை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அதில் தேங்கி கிடந்த தண்ணீரை ஆய்வு செய்தபோது அதில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசு புழுக்கள் இருந்ததை கண்டுபிடித்தார்.

இதையடுத்து கட்டுமான பணிகளை ஒப்பந்தம் எடுத்த காண்ட்ராக்டருக்கு அந்த இடத்திலேயே ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார். இனிமேல் இதுபோன்று டெங்கு கொசு உருவாகும் வகையில் தண்ணீர் தேங்கியிருந்தால் கடுமையான நடவடிக்கை மற்றும் பல மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரித்தார். இதையடுத்து பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல்கள், கடைகளில் கலெக்டர் அண்ணாதுரை அதிரடி சோதனை நடத்தினார். அங்கு பிரிட்ஜ் பின்புறம், கிரைண்டரில் உள்ள குழி உள்ளிட்ட பலவற்றில் தண்ணீர் தேங்கி உள்ளதா, பிளாஸ்டிக் பயன்பாடு இருக்கிறதா என சோதனை மேற்கொண்டார். இதைதொடர்ந்து பழைய பஸ் நிலையம் முழுவதும் சோதனை செய்தார்.

பின்னர் கரந்தை போக்குவரத்து பணிமனைக்கு சென்று டயர்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என ஆய்வு செய்தார். அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் டயர்கள் மட்டுமில்லாது வேறு எதிலும் தண்ணீர் தேங்காதவாறு பார்த்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தினார். மேலும் தற்காலிக பஸ் நிலையத்தையும் ஆய்வு செய்தார். தஞ்சை மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீர் சுத்தமாக உள்ளதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அடிக்கடி தொட்டியை சுத்தப்படுத்த வேண்டுமென ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து அவர் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட உடனிருந்தனர்.

Tags : Dengue mosquitoes ,bus stand ,Tanjore ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை