பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்க காலதாமதம் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் மறியல் போராட்டம்

பேராவூரணி, அக். 24: பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை தாமதமின்றி வழங்க வலியுறுத்தி பேராவூரணியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியை அம்மையாண்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பேராவூரணி அடுத்த அம்மையாண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 7 வருவாய் கிராமங்களை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இந்நிலையில் 253 விவசாயிகளுக்கு ரூ.54 லட்சம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வந்துள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அந்த தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தாமதம் செய்து வந்தனர். இதுகுறித்து கேட்டபோது பேராவூரணியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் புதிதாக கணக்கு துவங்கிய பிறகு தான் பணம் பெற்று கொள்ள முடியும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்களை சந்தித்து நேற்று முறையிட்டனர். அங்குள்ள அதிகாரிகள் அளித்த பதிலில் திருப்தியடையாத விவசாயிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, நடராஜன் ஆகியோர் தலைமையில் வங்கியை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். இதைதொடர்ந்து வங்கி முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் பேராவூரணி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விவசாயிகள் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை விரைவாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதையடுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் பேராவூரணி- பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Co-operative Bank ,
× RELATED இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது....