×

ரஜினி அரசியலுக்கு வந்தால் புதிய அரசியல் சரித்திரம் உருவாகும்

ஈரோடு, அக். 24:ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய அரசியல் சரித்திரம் உருவாகும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: காந்தியின் 150வது பிறந்தநாளை விழாவையொட்டி பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை நடந்து வருகிறது. இந்த யாத்திரையில் மது ஒழிப்பு, மரம் வளர்ப்பு, தீண்டாமை ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது.
சீன பட்டாசுகளை இந்தியாவில் விற்பனை செய்தாலோ அல்லது வாங்கினாலோ தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட்டுள்ளது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் அபகரிக்கப்பட்டு தற்போது அது யாரிடம் இருந்தாலும் எந்த காலத்தில் வாங்கி இருந்தாலும் அதை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக மொழிகளில் குறிப்பாக சமஸ்கிருதத்தை விட பழமையானது தமிழ்மொழி என உலகளவில் எடுத்து சென்று பறை சாட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டத்தை கூட்டி அனைத்து கட்சிகள் சார்பில் நன்றி தெரிவிக்க வேண்டும். இது மோடிக்கு பெருமை அல்ல. தமிழுக்கு கொடுக்கும் அங்கீகாரம்.  ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் புதிய அரசியல் சரித்திரம் உருவாகும். காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு மீண்டும் கொண்டு வரப்படுமா? என்பதை காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். புதிய கல்விக்கொள்கை குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன்முடிவுகள் வந்த பிறகுதான் இறுதி முடிவு எடுக்கப்படும். காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் மது இல்லாத தீபாவளி கொண்டாடும் வகையில் 26ம் தேதி முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Tags : Rajini ,
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...