×

மன்னார்குடியில் நடந்தது டெங்குவை ஒழிக்கமுடியாத தமிழகஅரசு மது விற்பனைக்கு இலக்கு தீர்மானிப்பதா?

திருத்துறைப்பூண்டி, அக்.24: டெங்குவை ஒழிக்கமுடியாத தமிழக அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் தீபாவளி சிறப்பு பரிசாக இந்த ஆண்டு தீபாவளி இலக்காக 385 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது பெரும் வேதனைக்குறியதாகும். இந்த விற்பனைக்கு இலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு சில சிறப்பு கட்டளைகளையும் விதித்திருப்பது கண்டனத்துக்குறியதாகும். குறிப்பாக தீபாவளி நேரத்தின்போது நேரத்துக்கு மதுக்கடைகளை திறக்கவேண்டும்.

தேவையான அளவு ஸ்டாக் வைத்துக்கொள்ளவேண்டும் சரக்கு இல்லை என எவரையும் திருப்பி அனுப்பக்கூடாது. பணியாளர்கள் எந்த காரணத்தை கொண்டும் விடுமுறை எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும தொடர்ந்து பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு எந்த சிறப்பு முயற்சிகளையும் எடுக்காத தமிழக அரசு மது விற்பனையில் இவ்வளவு அக்கறை காட்டுவது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்துவோம் என்று அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா தெரிவித்தார். அம்மா வழியில்தான் அதிமுக செயல்படுகிறது என்று அடிக்கடி பேசிவரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதற்கு நேர்ரெதிராக செயல்படுகிறார். எனவே தமிழக அரசு விரைவில் மது விலக்கை அமல்படுத்த முன் வரவேண்டும் மது இல்லாத தீபாவளியை கொண்டாட இளைஞர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும் என்றார்.

Tags : government ,Tamilnadu ,Mannargudi ,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...