×

தீபாவளி பண்டிகையையொட்டி திருவள்ளுவர் மைதானத்தில் தரைக்கடை வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்கும் பணி தீவிரம்

கரூர், அக். 24: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடை வியாபாரிகளுக்காக கடைகள் அமைக்கும் பணி திருவள்ளுவர் மைதானத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு  திருவள்ளுவர் மைதானத்தில் தரைக்கடைகள் அமைக்கப்பட்டு, ஒட்டுமொத்த பொதுமக்களும் இங்கு வந்து தேவையான ஜவுளி ரகங்களை வாங்கிச் செல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு அக்டோபர் 27ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளன. இதனை முன்னிட்டு கரூர் நகராட்சிக்கு சொந்தமான திருவள்ளுவர் மைதானத்தில் நேற்று காலை முதல் தரைக்கடைகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மைதான வளாகம் முழுதும் 300க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் பணி நடைபெற்று இன்று முதல் அனைத்து வியாபாரிகளும் தங்கள் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யத் துவங்குவார்கள்.

இன்று 24ம்தேதி முதல் 26ம்தேதி இரவு 12மணி வரை திருவள்ளுவர் மைதானத்துக்கு அதிகளவு மக்கள் வந்து செல்வார்கள் என்பதால் மாவட்ட காவல்துறை ஏற்பாட்டின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மேலும், மூன்று நாள் வியாபாரத்தின் போது, ஏலம் எடுத்தவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாடகை வசூல் செய்வதில் அவ்வப்போது தகராறு ஏற்பட்ட சம்பவங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.எனவே, இந்தாண்டு அதே போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பு வியாபாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.


Tags : shop ,ground dealers ,Diwali ,Tiruvalluvar Ground ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி