×

சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

சங்கரன்கோவில், அக். 24: சங்கரன்கோவில் நகராட்சியில் சேகரிக்கப்பட்ட மக்காத குப்பைகள், நெல்லை சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்கரன்கோவில்  நகராட்சி, நெல்லை மாவட்டத்தில் முதல்நிலை நகராட்சி ஆகும். இங்குள்ள 30 வார்டுகளில் சுமார் 70 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21 ஆயிரம் கட்டிடங்கள்  உள்ளன. நகராட்சி பகுதியில் தினமும் வீடு, வீடாக சென்று துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை வாங்கிச் செல்கின்றனர். நகர  பகுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 11 டன் மக்கும் குப்பைகளும், 7 டன் மக்காத  குப்பைகளும் சேகரிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் திருவேங்கடம் சாலை, மீரான்  சேட் காலனி, வாரந்சந்தை தெருவில் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம்  சேகரிப்பு மையம் மூலம் மறுசுழற்சி செய்யப்பட்டு இயற்கை உரங்களாக மாற்றப்படுகின்றன.

இந்நிலையில் சேகரிக்கப்பட்டு இருந்த மறுசுழற்சி செய்ய இயலாத 2830  கிலோ மக்காத பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்தும் வகையில் நெல்லை  இந்தியா சிமென்ட் ஆலைக்கு நகராட்சி வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. வாகனங்களை நகராட்சி ஆணையர் சந்தானம் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இதில் பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், சுகாதார அலுவலர் பாலச்சந்தர்,  சுகாதார ஆய்வாளர்கள் பிச்சையா, பாஸ்கர், மாதவராஜ், குமார், சக்திவேல்  உடனிருந்தனர்.


Tags : municipality ,cement plant ,Sankarankoil ,
× RELATED சொத்துவரி செலுத்தினால் 5 சதவீத ஊக்கத்தொகை